க.சண்முகவடிவேல்
திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர் ஒருவரிடம் செல்போன் திருடிய வழக்கில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட ஒருவர் காவல்நிலையத்தில் மரணமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் ஓரியூர் பகுதியைச் சேர்ந்த அங்கமுத்து முருகானந்தம் என்பவர் இன்று அதிகாலை சுமார் 6.30 மணி அளவில் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர் ஒருவரிடம் செல்போன் திருடியதாக கூறி கோவில் காவலாளிகள் அவரை பிடித்து சமயபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதனைத் தொடர்ந்து போலீசார் முருகானந்தத்தை சமயபுரம் காவல் நிலையத்தில் உள்ள விசாரணை கைதி அறையில் வைத்து விசாரித்து வந்த நிலையில், முருகானந்தம் இயற்கை உபாதை கழிப்பதற்காக காவல் நிலையத்தில் உள்ள கழிப்பறைக்கு சென்றுள்ளார். ஆனால் உள்ளே சென்ற அவர் வெகு நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த காவலர்கள் கழிப்பறை கதவை தட்டியுள்ளனர்.
ஆனாலும் கதவு திறக்கப்படாத நிலையில், கழிப்பறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். ஆப்போது கழிவறையில் முருகானந்தம் தூக்கு மாட்டி இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த லால்குடி டிஎஸ்பி மற்றும் திருச்சி மாவட்ட போலீஸ் எஸ் பி சுஜித் குமார், மணச்சநல்லூர் வட்டாட்சியர் சக்திவேல் முருகன், கிராம நிர்வாக அலுவலர் கோபாலகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் திவ்யா உள்ளிட்டவர்கள் காவல் நிலையத்திற்கு வந்து விசாரணை கைதி உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக சமயபுரம் போலீசார் கூறுகையில், சந்தேக முறையில் உயிரிழந்த முருகானந்தம் காவல் நிலைய கழிவறையில் அவரது இடுப்பு கழுத்தில் அணிந்திருந்த அரைஞ்கான் கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இறந்த முருகானந்தம் மது போதைக்கு அடிமையானவர். கடந்த 10 ஆண்டுகளாக மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து வாழ்ந்து வந்த இவர், மீது சமீபத்தில் தனது தாயை அடித்து கொலை செய்த வழக்கு அரியலூர் மாவட்டம் கூத்தூர் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதனிடையே கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சமயபுரம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட முருகன் என்ற விசாரணை கைதியை போலீஸார் அடித்து கொன்றதாக காவலர்கள் மீது வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“