திருச்சி, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொழில்களை விருத்தி செய்திருந்தாலும் திருச்சியின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவராக இருப்பவர் ஜெயகர்ணா. இவர் திருச்சி மாவட்ட பாரதிய ஜனதாவின் துணைத் தலைவராகவும் பதவி வகித்து வருகின்றார்.
திருச்சியில் வசித்து வரும் இவருக்கு நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. எதிர்முனையில் பேசிய நபர் தனது பெயர் முகம்மது அஷ்ரப் என்று கூறி ஜெயகர்ணாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக உறையூர் காவல் நிலையத்தில் ஜெயகர்ணா புகார் அளித்துள்ளார்.
மேலும், இன்று காலை திருச்சி மாவட்ட பாஜக தலைவர் ராஜசேகரன் மற்றும் நிர்வாகிகள் படை சூழ திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்யபிரியாவை நேரில் சந்தித்து தனக்கு வந்த புகார் தொடர்பான விளக்கங்களும், கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பான செல்போன் ஆதாரங்களையும் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து ஜெயகர்ணா கூறுகையில், நேற்று இரவு வழக்கம்போல் எனது பணிகளை முடித்து விட்டு வீட்டுக்கு சென்றுக்கொண்டிருந்தேன். அப்போது சுமார் எட்டு மணி இருக்கும், எனது அலைபேசிக்கு அழைப்பு ஒன்று வந்தது, அதை எடுத்து பேசும்போது, தன்னை முகம்மது அஷ்ரப் எனத் தெரிவித்துக்கொண்ட அந்த நபர், உன் கடைசி ஆசை என்ன? அந்த ஆசையை தீர்த்துக் கொள் நீ பாஜகவின் பெரிய புள்ளின்னா என்ன? நீ விரைவில் கொலை செய்யப்படுவாய் எனத் தெரிவித்து அழைப்பை துண்டித்துக் கொண்டார்.
உடனே இது தொடர்பாக உறையூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். பின்னர் தகுந்த ஆதாரங்களுடன் மாநகர காவல் ஆணையரையும் தற்போது சந்தித்து புகார் கொடுத்துள்ளேன் எனத் தெரிவித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது, திருச்சி மாவட்ட பாஜக மாவட்ட தலைவர் ராஜசேகரன் மற்றும் பாஜக நிர்வாகிகள் பலரும் இருந்தனர்.
திருச்சியில் பிரபல தொழிலதிபரும், அனைத்துக் கட்சியினராலும் நன்கு அறியப்பட்டவருமான ஜெயகர்ணாவுக்கு கொலை மிரட்டல் வந்த சம்பவம் திருச்சி தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. முன்னதாக, காவல்துறை தரப்பில் ஜெயகர்ணாவுக்கு வந்த அழைப்புகள் அனைத்தையும் ஆராய்ந்தும், ஜெயகர்ணா குறிப்பிட்ட அலைபேசி தொடர்பான பேச்சுவார்த்தைகளையும் சேகரித்து தொழில் போட்டியா அல்லது அரசியல் விவகாரமா என்ற கோணத்தில் விசாரணையை முடுக்கி விட்டிருக்கின்றனர்.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil