நடிகர் பிரகாஷ்ராஜ், கர்நாடக முன்னாள் முதல்வர் ஹெச்.டி.குமாரசாமி உள்ளிட்ட கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது திரையுலகிலும் அரசியலிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் பிரகாஷ்ராஜ், கர்நாடக முன்னாள் முதல்வர் ஹெச்.டி.குமாரசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைவர் பிருந்தா காரத், நிஜகுணானந்தா சுவாமி உள்ளிட்டோருக்கு கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது திரையுலகிலும் அரசியலிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவரால் எழுதப்பட்டிருக்கும் இந்தக் கடிதத்தில் 15 முக்கிய பிரபலங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தக் கொலை மிரட்டல் கடிதத்தில் பெயர் குறிப்பிடப்பட்ட அனைவரும் கொலை செய்யப்படுவார்கள் என்றும் அவர்கள் துரோகிகள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கொலை மிரட்டல் பட்டியலில் தங்கள் பெயர் இடம்பெற்றுள்ள பிரபலங்கள் அனைவரும் அந்தக் கடிதத்தைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
மர்ம நபரால் எழுதப்பட்டுள்ள இந்த கொலை மிரட்டல் கடிதத்தில், “நிஜகுணானந்தா சுவாமி, நீங்கள் உங்கள் சொந்த மதத்துக்கு எதிராகச் செயல்பட்டிருக்கிறீர்கள். ஜனவரி 29-ம் தேதி உங்களுடைய இறுதிப் பயணத்திற்குத் தயாராக இருங்கள். உங்களைத் தொடர்ந்து கீழே பட்டியலில் உள்ளவர்களும் தங்களது இறுதிப் பயணத்தை மேற்கொள்வார்கள். அதற்காக, நீங்கள் அவர்களை தயார் செய்ய வேண்டும்” என்று எழுதப்பட்டுள்ளது.
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த கொலைமிரட்டல் பட்டியலில், “நிஜகுணானந்தா சுவாமி, கர்நாடகா முன்னாள் முதல்வர் ஹெச்.டி.குமாரசாமி, நடிகர் பிரகாஷ்ராஜ், பஜ்ரங் தள அமைப்பின் முன்னாள் தலைவர் மகேந்திர குமார், நடிகரும் சமூகச் செயற்பாட்டாளருமான சேதன் குமார், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பி.டி.லலிதா நாயக், பேராசிரியர் பகவான், சமூகச் செயற்பாட்டாளர் மகேஷ் சந்திர குரு, முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவின் ஆலோசகர் தினேஷ் அமீன் மட்டு, எழுத்தாளர் சந்திரசேகர் பாட்டில், எழுத்தாளர் அக்னி ஶ்ரீதர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பிருந்தா காரத் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
A coward groups letter threatening that they will eliminate NIJAGUNANANDA SWAMY.. my name in the list too .. chalo #HumDekhenge ..#IndiaAgainstCAA_NRC #JustAsking pic.twitter.com/WOKbANls0q
— Prakash Raj (@prakashraaj) January 25, 2020
இந்த கடிதத்தை தனது டுவிட்டர் பக்கத்தில், பதிவிட்டுள்ள நடிகர் பிரகாஷ்ராஜ், “நிஜகுணானந்தா சுவாமியை கொலை செய்வோம் என்று அச்சுறுத்தும் ஒரு கோழை குழுக்கள் கடிதம் எழுதியுள்ளது… இந்த பட்டியலில் எனது பெயரும் இடம்பெற்றுள்ளது.. சலோ… இந்தியா சிஏஏ, என்.ஆர்.சி.க்கு எதிராக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரபலங்களுக்குக் கடிதம் மூலம் கொலைமிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக கர்நாடக உள்துறை அமைச்சர் பஸவராஜ் பொம்மை, இந்த விவகாரம் குறித்து போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறேன். எடியூரப்பா, முன்னாள் முதல்வாரக இருந்தபோது வழங்கப்பட்ட அதே பாதுகாப்பு ஹெச்.டி.குமாரசாமி மற்றும் சித்தராமையா ஆகிய இருவருக்கும் இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும்” என்று கூறினார்.
கர்நாடகாவில், மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும் இந்துத்துவ சக்திகளுக்கு எதிராகவும் எழுதியும் பேசியும் வந்த கன்னடப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் எழுத்தாளருமான கல்புர்கி மற்றும் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு அடையாளம் தெரியாத மர்ம மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அரசியல் செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய் இந்த கொலை வழக்குகள் தொடர்பாக விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், சுவாமி நிஜகுணானந்தா, நடிகர் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட 15 பேருக்கு கொலைமிரட்டல் விடுத்து கடிதம் எழுதப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.