கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததால் இன்று காலை வரை 36 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி, மேலும், 100-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் உயிரிழப்பு அதிகரிக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த விஷசாராயம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி-யிடம் வழங்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி விஷச் சாராய உயிரிழப்பு தொடர்பாக விசாரணை நடத்த சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி கோமதியை நியமனம் செய்துள்ளது தமிழ்நாடு அரசு. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பான முதல்வர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். இந்த விவகாரத்தில் ஒரு பெண் உட்பட 3 பேர் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக, கருணா புரத்தைச் சேர்ந்த சுரேஷ் பிரவீன் என்பவர்கள் சாராயம் குடித்ததால் இறந்து போன நிலையில், அவரது துக்க நிகழ்வுக்கு சென்றவர்கள் மீண்டும் அதே சாராயத்தை அப்பகுதியில் அருந்தியதால் இந்த உயிரிழப்பு அதிகரித்துள்ளது. ஒரே வீட்டில் இருவர் இறந்த துக்கம் தாளாமல் அப்பகுதியினர் அதே பகுதியில் கள்ளத்தனமாக விற்ற சாராயத்தை வாங்கி குடித்துள்ளனர். இந்த இறப்பு சம்பவம் தொடர்பாக அந்த வீட்டைச் சேர்ந்த நபர்கள் ஊடகவியலாளர்களிடம் சாராயம் குடித்ததால் தான் இவர்கள் இறந்தனர் என்பதை தெரிவித்தபோது அப்போதைய கள்ளக்குறிச்சி ஆட்சியர் இதற்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டதன் அடிப்படையில், மற்றவர்களும் அதேசாராயத்தை அருந்தியதால் இந்த உயிரிழப்பு அதிகரித்துள்ளது. ஆட்சியர் கவனக்குறைவுடன் செயல்பட்டதுடன், கள்ளச்சாராயா இறப்பு சம்பவத்தை மறைத்து வயிற்றுப்போக்கு என அறிக்கை விட்டதால் மற்றவர்களும் மீண்டும் அதே சாராயத்தை அருந்தி உள்ளனர். இந்த இறப்பு சம்பவத்திற்கு அப்போதைய ஆட்சியர் ஷ்ரவன்குமார் தான் காரணம் என அப்பகுதி கிராம மக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக நடவடிக்கை மேற்கொண்ட மாநில அரசு, ஆட்சியர் ஷ்ரவன்குமாரை பணியிட மாற்றம் செய்து புதிய ஆட்சியராக எம்.எஸ்.பிரசாந்த் என்பவரை நியமித்துள்ளது. அதேபோன்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டதோடு, புதிய எஸ்பியாக ரஜத் சதுர்வேதியை நியமித்துள்ளது.
மேலும் மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு டிஎஸ்பி தமிழ்செல்வன், கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் கவிதா,திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர்பாண்டி செல்வி, திருக்கோவிலூர், உதவி காவல் ஆய்வாளர் பாரதி மற்றும் அப்பகுதி காவல் நிலைய ஆய்வாளர்கள் ஆனந்தன், சிவசந்திரன்,காவல் நிலைய எழுத்தர் பாஸ்கரன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், திருக்கோவிலூர் டிஎஸ்பி மனோஜ்குமார் ஆகியோரும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து. இது தொடர்பான வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.
/indian-express-tamil/media/post_attachments/8cf24f0b-8f8.jpg)
ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்:இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த கள்ளக்குறிச்சி எம்எல்ஏ செந்தில்குமார், “கள்ளக்குறிச்சி நகரில் கஞ்சா விற்பனையும், கள்ளச்சாராயமும் தடையின்றி நடைபெறுகிறது. தற்போது சிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களின் நிலை பரிதாபமாக உள்ளது. மாவட்ட ஆட்சியர் வயிற்றுப் போக்கால் உயிரிழந்ததாகக் கூறுவதெல்லாம் ஏற்புடையது அல்ல. அரசு உடனடியாக உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் அளிக்கவேண்டும். கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.
இதனிடையே அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் மா.சுப்ரமணியன் ஆகியோர் கள்ளக்குறிச்சியில் முகாமிட்டு நிவாரணப் பணிகளை ஆய்வு செய்து வருகின்றனர். சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவின்படி, கள்ளக்குறிச்சி பகுதியில் வேறு யாரேனும் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வராமல் இருக்கிறார்களா எனக் கண்டறிய சுகாதார குழுவினர் வீடு வீடாகச் சென்று ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. வீட்டில் சுய பரிசோதனை செய்து கொண்ட நபர்களையும் அழைத்துச் சென்று மருத்துவக் குழு உறுப்பினர் பரிசோதனை செய்து வருகின்றனர். வீட்டில் இருந்த மேலும் சிலர் அழைத்துவரப்பட்டு அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது”.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராய சம்பவத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோரை அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி சந்திக்க உள்ளார். அதேபோல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் கள்ளக்குறிச்சி கிளம்பி இருக்கிறார்.