மாலை 4.46: ”ஹாசினிக்கு நியாயம் கிடைத்துவிட்டது. இப்படி இனிமேல் யாராவது செய்தால் அவர்களுக்கு பயம் வர வேண்டும். இதற்காகத்தான் நான் ஓராண்டு போராடினேன். இந்த ஓராண்டு நான் தூங்கவே இல்லை. நீதியமைப்புக்கு நன்றி”, என ஹாசினியின் தந்தை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மாலை 4.40:சிறுமி ஹாசினி கொலை குற்றவாளி தஷ்வந்திற்கு மரண தண்டனை விதித்து செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பை கேட்டவுடன் ஹாசினியின் தந்தை கதறி அழுதார்.
மதியம் 3.31:தஷ்வந்துக்கான தண்டனை விவரம் நேரம் குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மதியம் 03.04:சிறுமி கொலை வழக்கில் தஷ்வந்த் குற்றவாளி என மகிளா நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் தீர்ப்பு வழங்கினார். இந்திய தண்டனை சட்டப்பிரிவுகள் 363, 366, 354பி, 2012 மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளது. தண்டனை விவரங்கள் சற்று நேரத்தில் அறிவிக்கப்பட உள்ளன.
மதியம் 1.48: சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தீர்ப்பு அறிவிப்பு தாமதமாகியுள்ளது. மதியம் 3 மணியளவில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காலை 11.35: ஹாசினி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தஷ்வந்த் செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் ஆஜரானார்.
வழக்கின் பின்னணி:
தமிழகத்தையே உலுக்கிய சிறுமி ஹாசினி கொலை வழக்கில் செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் இன்று (திங்கள் கிழமை) தீர்ப்பு வழங்க உள்ளது.
சென்னை குன்றத்தூர் பகுதியை சேர்ந்த சிறுமி ஹாசினி கடந்தாண்டு பிப்ரவரி மாதம், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். மேலும், அச்சிறுமியின் உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக, அதே பகுதியை சேர்ந்த தஷ்வந்த் என்ற பொறியியல் பட்டதாரி கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து, ஜாமீனில் வெளியே வந்த தஷ்வந்த், நகைகளுக்காக தன் தாயையும் கொலை செய்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. அதன்பின், தப்பியோடிய தஷ்வந்தை தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு மும்பையில் கைது செய்தனர். அவ்வாறு கைது செய்யப்பட்டு மும்பை விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில், மீண்டும் தஷ்வந்த் தப்பியோடினார். பின்னர், சில மணிநேரங்களிலேயே போலீசார் தஷ்வந்தை கைது செய்தனர்.
தற்போது, தஷ்வந்த் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஹாசினி கொலை வழக்கு செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இரு தரப்பு வாதங்களும் கடந்த 14-ஆம் தேதி நிறைவுற்றது. இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
கொலையாளி தஷ்வந்த் மீதான வழக்கு விபரங்கள்...