தமிழ்நாடு பட்ஜெட் விவாதம் இன்று தொடங்கியது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரம் சூடு பிடித்துள்ள நிலையில் விவாதம் எதிர்பார்ப்புக்கு உள்ளாகிறது.
தமிழ்நாடு பட்ஜெட் கடந்த 15-ம் தேதி துனை முதல்வரும், ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். 2018-19 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதன் பின்பு, நடைப்பெற்ற சிறப்புக் கூட்டத்தில், கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்து, அனைத்து எதிர்க்கட்சிகளும் கடுமையாக விமர்சனத்தை முன்வைத்தன. அதன் பின்பு, கடந்த வெள்ளிக்கிழமை சட்டப்பேரவை கூடவில்லை. மூன்று நாட்கள் விடுமுறைக்கு பின்பு, இன்று(19.3.18) இன்று சட்டசபை மீண்டும் கூடுகிறது.
தமிழ்நாடு பட்ஜெட் விவாதம் வரும் 21 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், பின், 22ஆம் தேதி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளிப்பார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
.கேள்வி நேரத்துடன் இன்றைய சட்டப்பேரவை துவங்குகிறது. பட்ஜெட் மீதான விவாதம் தொடர்பான LIVE UPDATES
பகல் 1.15 : ‘கடன்பெற்று ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் கட்டுவது ஏன்?’ என திமுக கேள்வி எழுப்பியது. இதற்கு ‘திமுக ஆட்சிக் காலத்தில் கடன்பெற்று ஏன் செம்மொழி மாநாடு நடத்தினீர்கள்?’ என அமைச்சர் தங்கமணி கேள்வி எழுப்பினார்.
பகல் 1.00 : விஷ்வ ஹிந்து பரிசத்தின் ரத யாத்திரையை, தமிழகத்தில் அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தி முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ. அபூபக்கர் மற்றும் அதிமுக கூட்டணி எம்.எல்.ஏ.க்களான தமீமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.
பகல் 12.45 : திமுக உறுப்பினர் ப.ரங்கநாதன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ‘சட்டத்திற்கு உட்பட்டு எம்.எல்.ஏக்களோ, அமைச்சர்களின் உறவினர்களோ டெண்டர்கள் எடுப்பதில் எந்த தவறும் இல்லை. எம்.எல்.ஏக்கள், அவர்களுடைய உறவினர்கள் வேறு தொழிலே செய்யக்கூடாதா? இந்தக் கேள்வியில் உள்நோக்கம் இருக்கிறது’ என குறிப்பிட்டார்.
பகல் 12.30 : திமுக எம்.எல்.ஏ. ரங்கநாதன் கூறுகையில், ‘அரசு டெண்டர்களை உயர் பொறுப்பில் உள்ளவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் உறவினர்கள் அதிகமாக எடுக்கிறார்கள். சமமான வாய்ப்பு கொடுக்கக்கூடாதா?’ என கேள்வி எழுப்பினார். இது அவையில் சலசலப்பை கிளப்பியது.
பகல் 11.25 : நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை ஆதரிக்கும்படி மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைக்கு பதில் தெரிவித்த அவை முன்னவரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், ‘ஆந்திரா சிறப்பு அந்தஸ்து பிரச்னைக்கும், காவிரி பிரச்னைக்கும் தொடர்பில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான அவகாசம் மார்ச் 29 வரை இருக்கிறது’ என கூறினார்.
பகல் 11.20 : ‘மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட உள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்க வேண்டும்’ என சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
பகல் 11.00 : நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில், ‘கடையநல்லூர் நகராட்சியில் ஆய்வுக்குப்பின் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும். திருப்பூர் தெற்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ 612 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்க இந்த ஆண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
அனகாபுத்தூர், பம்மல், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும்’ என கூறினார்.
காலை 10.35 : மன்னார்குடி எம்.எல்.ஏ. டி.ஆர்.பி. ராஜா கேள்விக்கு உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பதில் அளிக்கையில், ‘மன்னார்குடி அரசினர் கலைக்கல்லூரியில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்ட ரூ.4.23 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.’ என குறிப்பிட்டார்.
காலை 10.30 : சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா பேசுகையில் ‘அரசின் அனைத்து திட்டங்களிலும் மன்னார்குடி தொகுதி திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகிறது’ என குற்றம் சாட்டினார்.
காலை 10.10 : சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் தனசேகரன், ராஜாங்கம், ஜான் ஜேக்கப், கந்தசாமி, ஆண்டிவேல் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காலை 10.00 : தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. தேனி மாவட்டம், குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு சட்டப் பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காலை 9.30 : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பிரச்னையில் மத்திய, மாநில அரசுகள் அலட்சியம் காட்டுவதாக இன்று எதிர்க்கட்சிகள் பிரச்னையை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.