தமிழ்நாட்டில் டிசம்பர் 11 முதல் டிசம்பர் 14ம் தேதி வரை சென்னை, டெல்டாவின் வடகடலோரா மாவட்டங்கள், தென்தமிழகம், தமிழகத்தின் உள்மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த வாரம் ஃபீஞ்சல் புயல் காரணமாக சென்னை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்பட பல மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது. இதனால், குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது வலுவடைந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 11 ம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை தமிழகம் கடலோரப் பகுதிகளையொட்டி நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், தமிழகத்தில் டிசம்பர் 11ம் தேதி முதல் டிசம்பர் 14ம் தேதி வரை பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜாண் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் டெல்டாவின் வட கடலோர மாவட்டங்கள் முதல் காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் டிசம்பர் 11 மற்றும் 12ம் தேதிகளிலும், தென்மாவட்டங்கள் மற்றும் உள்தமிழக மாவட்டங்களி்ல 13 மற்றும் 14 ஆகிய தேதிகளிலும் மழை பெய்ய உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “டிசம்பர் 3வது வாரம் முடியும் வரை பேஸ் 5-ல் (இந்தோ- சீனா ) எம்.ஜே.ஓ இருக்கும். இது நமக்கு சிறந்த விளைவை ஏற்படுத்தும் வகையில் இல்லை. அதேபோல் மோசமான விளைவை தருவதாகவும் இது இல்லை. இது இந்தோ சீனா பேசினில் இருந்து வங்காள விரிகுடாவுக்கு இன்னொரு அழுத்தத்தை கொண்டு வரலாம். இதனால் டிசம்பர் 16-18 ஆகிய தேதகிளில் இன்னொரு குறைந்த காற்றழுத்தத்தை நாம் எதிர்பார்க்கலாம்.” என்று சுயாதீன வானிலை ஆய்வாளரான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.
மேலும், “டிசம்பர் மாதம் என்பது வடகிழக்கு பருவமழையின் கடைசி காலம். இதனால், முன்கூட்டியே இப்போது சிலவற்றை கணிப்பது சரியாக இருக்காது. அதன்படி, இப்போது உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக சென்னை மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஏரியாக்களில் டிசம்பர் 11 மற்றும் 12ம் தேதிகளில் கனமழை பெய்யும். ஆனால், அந்த மழை என்பது மக்களால் சமாளிக்க கூடிய வகையில் தான் இருக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.
எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிடுகையில் “இணைக்கப்பட்டுள்ள படத்தை பார்த்தாலே நன்கு தெரியும். இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் நல்ல மழை கிடைக்கும். அதேபோல் டிசம்பர் 11 மற்றும் 12 ம் தேதிகளில் நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், பாண்டிச்சேரி கடற்கரை பகுதிகளிலும் கனமழை என்பது பெய்யும். தற்போது உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறுமா என்றால் அதற்காகான வாய்ப்பு மிக குறைவு தான். இதனால் ஃபீஞ்சல் புயல் போன்ற பாதிப்பு ஏற்படாது.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தென்தமிழகத்தைப் பொறுத்தவரை தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் மழை இருக்காது. அதேவேளையில் ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் டிசம்பர் 13 மற்றும் டிசம்பர் 14 ஆகிய தேதிகளில் மழை இருக்கும். இந்த மழை என்பது வடதமிழக கடலோர மாவட்டங்களில் பெய்யும் கனமழையை ஒப்பிடும்போது குறைவாகவே இருக்கும். மேற்கு தமிழகம் மற்றும் உள்தமிழக மாவட்டங்களை எடுத்து கொண்டால் காற்றழுத்த தாழ்வு பகுதி மன்னார் வளைகுடா வழியாக அரபிக்கடலுக்கு செல்லும்போது மழை பெய்ய வாய்ப்புள்ளது. கிறிஸ்துமஸ் வரை தமிழகத்தில் மழையை பார்க்கலாம். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழைக்கான மழையின் அளவு 500 மில்லிமீட்டரை தாண்ட வாய்ப்புள்ளது.” என்று கணித்துள்ளார்.
சென்னை மட்டும் மீண்டும் ஒருமுறை 1000 மில்லிமீட்டர் மழையை தொட வாய்ப்புள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக கடல் வரும் 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை கொந்தளிப்பாக இருக்கலாம்” என்று பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.