/indian-express-tamil/media/media_files/2025/03/03/wsVb6NMiT01PZIoAxJLF.jpg)
தி.மு.க ஆளும் தமிழகத்துக்கும், மத்திய அரசுக்கும் இடையே நிலவும் “மொழிப் போர்” ஒரு கடினமான அரசியல் சிக்கலைத் தீர்க்கும் சவாலை காங்கிரஸுக்கு முன்வைக்கிறது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Decode Politics: Why Congress is in a fix over ‘language war’ row between Tamil Nadu, Centre
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் பாதி மார்ச் 10 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், இந்தி திணிப்பு விவகாரம் குறித்து முக்கியமாக கவனிக்கப்பட வேண்டும். இந்தியா கூட்டணி இந்தப் பிரச்சனையை எவ்வாறு கையாள்கின்றன என்பது முக்கியம். அவர்கள் ஒரே பக்கத்தில் இருந்தால், அவர்களில் பெரும்பாலானோர் இந்தி பேசும் மாநிலங்களில் தங்கள் வாக்கு வங்கியை மனதில் கொள்ள வேண்டும்.
"மொழிப் போர்" என்றால் என்ன?
2020 தேசிய கல்விக் கொள்கையை (NEP), அமல்படுத்த மாநிலம் மறுத்ததால், சமக்ரா சிக்ஷா திட்டம் தொடர்பான நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாக மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு கூறியதை அடுத்து சர்ச்சை வெடித்தது.
கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில், தமிழக முதல்வர், கல்வி உரிமைச் சட்டத்தின் (ஆர்.டி.இ) விதிகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்ட மத்திய நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ. 2,152 கோடியை விடுவிக்கக் கோரினார்.
இந்த சூழலில் தான் மும்மொழிக் கொள்கை தொடர்பான மோதல் எழுந்துள்ளது. தேசிய கல்வி கொள்கை என்பது பிராந்தியங்கள் முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று மத்திய அரசு கூறினாலும், இதனை நீண்ட காலமாக இந்தியைத் திணிக்கும் முயற்சியாகவே தமிழ்நாடு பார்க்கிறது.
இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு பழமையான வரலாறு தமிழ்நாட்டுக்கு உண்டு. கேரளா மற்றும் கர்நாடகா போன்ற தென் மாநிலங்கள் உட்பட பெரும்பாலான மாநிலங்களைப் போலல்லாமல், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றை மாணவர்களுக்கு கற்பிக்கும் இரு மொழி கொள்கையை தமிழ்நாடு செயல்படுத்துகிறது.
தேசிய கல்வி கொள்கை குறித்து காங்கிரஸின் நிலைப்பாடு என்ன?
"இந்தப் பிரச்சனையில் காங்கிரஸின் நிலைப்பாடு நேரடியானது. மாநிலத்தின் ஒப்புதலுடன் இந்தக் கொள்கை அமல்படுத்தப்பட வேண்டும் என மக்களவையில் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் கூறினார்.
கோவிட் தொற்றின் போது தேசியக் கல்விக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்ட போது இதனை காங்கிரஸ் எதிர்த்தது. இது "மனித வளர்ச்சி மற்றும் அறிவு விரிவாக்கத்தின் அடிப்படை இலக்கு" ஆகியவற்றை தவறவிட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டது. மேலும், சரியாக ஆலோசனை செய்யாமல் நோய்த் தொற்று காலத்தில் இதனை கொண்டு வருவதாக கூறப்பட்டது.
தேசியக் கல்விக் கொள்கை பாராளுமன்றக் கண்காணிப்பைத் தவிர்த்துவிட்டதாக காங்கிரஸ் கூறியது. கல்வியாளர்களுடன் அல்லாமல் "ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்துடன் (RSS) மட்டுமே இதன் ஆசோசனை நடத்தப்பட்டது" என்றும் வாதிடப்பட்டது.
பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையிலான டிஜிட்டல் பிளவை தேசிய கல்விக் கொள்கை விரிவுபடுத்தும் என்றும், இந்தக் கொள்கை பொதுக் கல்வியை தனியார்மயமாக்குவதை ஊக்குவிப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதன் விளைவாக "நடுத்தர வர்க்கம் மற்றும் சமூகத்தின் பின்தங்கிய பிரிவினருக்கு கல்வி அணுக முடியாததாகி விடும்" என்றும் காங்கிரஸ் கூறியது.
காங்கிரசுக்கு ஏன் சிக்கலாக அமைகிறது?
"இந்தி எதிர்ப்பு" என்று முத்திரை குத்துவதற்கு பா.ஜ.க-வுக்கு வாய்ப்பளிக்க விரும்பாத காங்கிரஸ் ஒரு அளவிடப்பட்ட அணுகுமுறையை மேற்கொள்கிறது. அவ்வாறு முத்திரை குத்தப்பட்டால் இந்தி பெரும்பான்மையாக இருக்கும் பீகார் மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநில தேர்தல்களில் பின்னடைவு ஏற்படக் கூடும். பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், உத்தர பிரதேசத்தில் 2027-ல் தேர்தல் நடைபெறுகிறது.
"இந்த விவகாரம் சற்று சிக்கலானது. ஏனென்றால் உத்தரபிரதேசம், பீகார் மற்றும் பிற இந்தி பெரும்பான்மை கொண்ட மாநிலங்களில் காங்கிரஸ் தனது தளத்தை வலுப்படுத்த வேண்டும். ஸ்டாலின் சொல்வதை ஆதரிப்பது, இந்த இரண்டு மாநிலங்களிலும் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு எதிராக ஒரு கதையை உருவாக்க பா.ஜ.க-வுக்கு வாய்ப்பாக அமையும்" என லக்னோவின் மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறினார்.
பீகாரைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் இதனை ஒப்புக் கொண்டார். "தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் இது போன்ற பிரச்சனைகளை பா.ஜ.க-விற்கு வாய்ப்பாக வழங்கக் கூடாது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் இந்த விவகாரத்தில் காங்கிரஸின் வெளிப்படையான மௌனம், தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியதை, ஜெயந்த் சவுத்ரியின் என்.டி.ஏ., ராஷ்ட்ரிய லோக் தளம் (ஆர்.எல்.டி.,) கவனித்ததாகத் தெரிகிறது.
உத்தர பிரதேச சட்டசபையில் இந்திக்கு மரியாதை மற்றும் தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவு கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது, ஆர்.எல்.டி எம்.எல்.ஏக்கள் மற்றொரு இந்திய கூட்டணி கட்சியான சமாஜ்வாடி கட்சியின் (SP) மௌனத்தையும் கேள்வி எழுப்பினர்.
இரு கட்சிகளும் 'சிக்கலான சூழ்நிலையை சமாளிக்க சிறந்த வழியை' உருவாக்கி வருவதாக அரசியல் வட்டாரம் கூறுகிறது. "இந்த விவகாரத்தில் உயர்மட்டக் குழு விரைவில் முடிவெடுக்கும். நாங்கள் பிராந்திய மொழிகள் மற்றும் இந்தியை மதிக்கிறோம், இது நாங்கள் எடுக்கும் நிலைப்பாட்டில் பிரதிபலிக்கும்" என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறினார்.
இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் எப்படி இருக்கும்?
பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பாதியில் தி.மு.க இந்த பிரச்சனையை எழுப்ப வாய்ப்புள்ள நிலையில், அதன் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் முழு மனப்பூர்வமான ஆதரவைப் பெறுமா என்பதைப் பார்க்க வேண்டும்.
பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) வரைவு வழிகாட்டுதல்களுக்கு எதிராக ஸ்டாலினின் போராட்டத்தில் அகிலேஷ் யாதவும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் ஆதரவு தெரிவித்தாலும், மொழிப் பிரச்சினை இரு கட்சிகளுக்கும் அவ்வளவு நேரடியானதாகத் தெரியவில்லை.
காங்கிரஸ் 'எச்சரிக்கையான' அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. "தி.மு.க தலைவர்கள் இந்திக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகின்றனர். நாம் அதை செய்ய முடியாது. தெற்கிலிருந்து வடக்கேயும், மேற்கிலிருந்து கிழக்கிலும் எங்களின் பயணம் உள்ளது. இந்தி அல்லது வேறு எந்த மொழிக்கும் எதிராக நாம் செல்ல முடியாது. நாடாளுமன்றத்தில் இந்த விவகாரத்தில் நிலைப்பாட்டை எடுக்கும்போது இது மனதில் வைக்கப்படும்" என்று காங்கிரஸ் மூத்த எம்.பி. ஒருவர் கூறியுள்ளார்.
- Asad Rehman
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.