ஜெ.தீபா வீட்டுக்கு இன்று வருகை தந்த போலி வருமான வரி அதிகாரியால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸை கண்டதும் அந்த அதிகாரி ஓட்டம் பிடித்தார்.
தீபா வீட்டில் புகுந்த போலி வருமான வரி அதிகாரி...
ஜெ.தீபாவின் இல்லம், சென்னை, தியாகராய நகரில் சிவஞானம் தெருவில் அமைந்திருக்கிறது. ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, இவரைத் தேடி தொண்டர் கூட்டம் படையெடுத்ததால் அந்த வட்டாரமே கலகலப்பாக இருந்தது. ஆனால் ஓ.பன்னீர்செல்வத்தின் ‘தர்மயுத்தம்’ ஸ்டார்ட் ஆகவும், இங்கு வெறிச்சோட ஆரம்பித்தது.
தீபா வீட்டில் புகுந்த ஐடி அதிகாரியின் அடையாள அட்டை
ஜெ.தீபா, அதிமுக.வின் இரட்டை இலை சின்னத்திற்கும் உரிமை கோரி பார்த்தார். எதுவும் நடக்கவில்லை. இப்போது ஜெயலலிதாவின் அண்ணன் மகள் என்ற அடிப்படையில் போயஸ் கார்டன் உள்ளிட்ட சொத்துகளுக்கு உரிமை கோரி வருகிறார். அவ்வப்போது தனக்கு மிரட்டல்கள் வருவதாக போலீஸில் புகார் கொடுத்து வருகிறார்.
ஜெ.தீபாவின் திடீர் பேட்டி உள்ளிட்ட நடவடிக்கைகளால் அவரை எப்போதும் போலீஸார் கண்காணித்தபடியே இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு ஜெ.தீபாவின் தி.நகர் இல்லத்திற்கு டிப்-டாப் ஆசாமி ஒருவர் வந்தார். தன்னை வருமான வரித்துறை அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்ட அவர், வீட்டில் சோதனை நடத்தவேண்டும் என கேட்டார்.
ஜெ.தீபாவின் கணவர் மாதவன் மட்டுமே அப்போது வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. அந்த ஆசாமியின் கோரிக்கையால் அவருக்கு தூக்கி வாரிப் போட்டது. இதற்கிடையே ஜெ.தீபா வீடு பகுதியை சேர்ந்த போலீஸார் அங்கு வந்துவிட்டனர். அவர்கள் அந்த டிப்-டாப் ஆசாமியை அணுகி, ‘நீங்கள் ஐ.டி ஆபீசர் என்றால், அடையாள அட்டையைக் காட்டுங்கள்’ எனக் கேட்டிருக்கிறார்கள். அதன்பிறகு அந்த ஆசாமி உளறிக் கொட்ட ஆரம்பித்தார்.
வருமான வரித்துறை உயர் அதிகாரிகளை அழைப்பதாக போக்கு காட்டியபடியே அங்கிருந்து சுவர் ஏறிக் குதித்து அந்த ஆசாமி தப்பி ஓடினார். சிறிது தூரம் விரட்டிச் சென்ற போலீஸாரால் அவரை பிடிக்க முடியவில்லை. பிரபலமான ஒருவரின் வீட்டிலேயே பட்டப்பகலில் ஒருவர் அத்துமீறி நுழைந்து மோசடி செய்ய துணிந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தத் தகவல் தீபாவுக்கு தெரிவிக்கப்பட்டதும், அவர் அதிர்ந்தார். இதன் பின்னணியில் தனக்கு வேண்டாத அரசியல் பிரமுகர்கள் இருக்கலாம் என தீபா கருதுவதாக கூறுகிறார்கள். இது குறித்து மாதவன் கூறுகையில், ‘போலீஸில் கொடுக்கப்பட்ட ஒரு புகார் குறித்து விசாரிக்க வந்ததாக அவர் கூறினார். வருமான வரித்துறை எனக் கூறி ஒரு அடையாள அட்டையையும் என்னிடம் காட்டினார். போலீஸைக் கண்டதும் ஏன் ஓட்டம் பிடித்தார் எனத் தெரியவில்லை’ என்றார் அவர்.