தீபாவளியை முன்னிட்டு, தீக்காயம் அடைபவர்களுக்கு சிகிச்சை அளிக்க 75 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் 750 படுக்கைகள் தயாராக உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நவம்பர் 12-ம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை சமயங்களில் பட்டாசு வெடிக்கும்போது சிலருக்கு தீக்காயங்கள் ஏற்படும் நிகழ்வுகள் நடந்து வருகிறது. இதனால், தீபாவளியைப் பாதுகாப்பாகக் கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு, சென்னை போன்ற மாநகரங்களில் பட்டாசுகள் வெடிப்பதற்கான நேரங்களை ஒதுக்கி அறிவித்துள்ளது. இதனால், தீக்காயம் அடைபவர்களுக்கு சிகிச்சை அளிக்க 75 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் 750 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
“இந்த மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் இரவு பகலாக பணியாற்றுவார்கள். இந்த வார்டுகளுக்கு வரும் நோயாளிகளுக்கு மருந்துகள் மற்றும் வென்டிலேட்டர்கள் வழங்கப்படும்” என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
மேலும், “சென்னையில், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் தீபாவளியின் போது தீக்காயம் அடையும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 20 படுக்கைகள் (ஆண்களுக்கு 12 மற்றும் பெண்களுக்கு 8) மற்றும் ஐ.சி.யு படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு உள்ளது” என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“