பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேலுக்கு எதிரான வழக்கில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு விலக்கு அளித்தும் சாட்சியத்தை பதிவு செய்ய வழக்கறிஞர் எஸ்.கார்த்திகை பாலன் என்பவரை நியமித்தும் சென்னை உயர் நீதிமன்றம் இன்று (நவ.7) உத்தரவிட்டுள்ளது.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட டெல்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோருக்கு எதிராக 2019-ம் ஆண்டு தற்போது அ.தி.மு.க பொது செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமி, 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்வதற்காக வழக்கை மாஸ்டர் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி தாம் சாட்சியம் அளிக்க இயலாது எனவும், தமது வீட்டில் சாட்சியத்தை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டும் எனவும் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், "தற்போது எதிர்க்கட்சித் தலைவராக உள்ள தனக்குள்ள பாதுகாப்பு வழிமுறைகள் காரணமாக, உயர் நீதிமன்ற வளாகத்துக்கு வரும் போது, மற்ற வழக்காடிகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும். இந்த சிக்கல்களை தவிர்ப்பதற்காக வழக்கறிஞர் ஆணையர் ஒருவரை நியமிக்க வேண்டும்.
மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராவதை வேண்டுமென்றே தவிர்க்கவில்லை. அனைத்து சட்ட நடைமுறைகளையும் பின்பற்ற தயாராக இருக்கிறேன் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்த மனு இன்று (நவ.7) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது,
பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேலுக்கு எதிரான வழக்கில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு விலக்கு அளிக்கப்படுவதாகவும் சாட்சியத்தை பதிவு செய்ய வழக்கறிஞர் எஸ்.கார்த்திகை பாலன் என்பரை நீதிமன்றம் நியமனம் செய்தும் உத்தரவிட்டது. மேலும், சாட்சியப் பதிவை ஒரு மாதத்தில் முடிக்க வேண்டும்" எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“