ராணுவ கண்காட்சியில் சிலிர்க்க வைத்த சாகசம் : 3 லட்சம் பேர் கண்டு களித்தனர்

சென்னையை அடுத்த திருவிடந்தையில் ராணுவ தளவாட கண்காட்சி நிறைவு விழாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சிகளை 3 லட்சம் பேர் பார்த்து ரசித்தனர்.

சென்னையை அடுத்த திருவிடந்தையில் ராணுவ தளவாட கண்காட்சி நிறைவு விழாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சிகளை 3 லட்சம் பேர் பார்த்து ரசித்தனர்.

சென்னையை அடுத்த திருவிடந்தையில் இந்திய பாதுகாப்பு துறையின் 10-வது ‘டெபெக்ஸ்போ- 2018’ என்ற ராணுவ தளவாட கண்காட்சி கடந்த 11-ந் தேதி தொடங்கியது.
தென்னிந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் நடத்தப்பட்ட இந்த கண்காட்சியில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 12-ந் தேதி கலந்துகொண்டார்.

இந்திய ராணுவத்தின் வலிமையை பறைசாற்றும் வகையிலும், உள்நாட்டு குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் ராணுவ தளவாட உற்பத்திகளை அதிகரிக்கும் நோக்கத்திலும், சர்வதேச நாடுகளுக்கு அதனை தெரிவிக்கும் வகையிலும் இந்த கண்காட்சி நடத்தப்பட்டது.
ரூ.800 கோடி செலவில், 2.90 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்ட இந்த கண்காட்சியில் 701 ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்கள் பங்கேற்றன. அவற்றில் 539 இந்திய நிறுவனங்களும், 162 வெளிநாட்டு நிறுவனங்களும் அடங்கும். 7 அரங்குகளில் இந்தியாவில் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு என பிரத்யேகமாக அரங்கு அமைக்கப்பட்டிருந்தது.

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு இக்கண்காட்சி அரங்கில் 15 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டன. டி.ஆர்.டி.ஓ., பெல், பி.இ.எம்.எல்., பாரத் எலெக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட முக்கிய இந்திய நிறுவனங்களும், அமெரிக்காவின் போயிங், பிரான்சின் ரபேல், ஏர்பஸ் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களும் பங்கேற்றன.

அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, கொரியா உள்ளிட்ட 47 நாடுகளின் அரசு பிரதிநிதிகள், பாதுகாப்புதுறை அதிகாரிகள் பங்கேற்றனர். இக்கண்காட்சியில் முதல் மூன்று நாட்கள் வர்த்தக நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று வர்த்தகம் தொடர்பான ஆலோசனைகளை மேற்கொண்டனர். இதில், முக்கிய நிகழ்வாக ராணுவ தளவாடங்கள் உற்பத்தி செய்வது தொடர்பாக இந்தியா-ரஷ்யா இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) சார்பில் 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. இதைத்தவிர, கண்காட்சியில் பங்கேற்ற தனியார் நிறுவனங்கள் சார்பிலும் பல்வேறு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த கண்காட்சியை முன்னிட்டு, பாதுகாப்புத்துறையில் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் ‘ஐடெக்ஸ்’ என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இந்த கண்காட்சியின் மூலம் எத்தனை கோடி அளவுக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின, எவ்வளவு முதலீடு செய்யப்பட்டுள்ளது என்ற விவரங்கள் அனைத்தும் ஒரு வாரத்துக்கு பிறகே தெரியவரும் என பாதுகாப்பு துறை செயலாளர் (ராணுவ தளவாட உற்பத்தி) டாக்டர் அஜய் குமார் கூறினார்.

4 நாட்களாக நடைபெற்று வந்த இந்த கண்காட்சி நேற்றுடன் (ஏப்ரல் 14) நிறைவடைந்தது. நிறைவு விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், பாதுகாப்பு துறை செயலாளர் டாக்டர் அஜய்குமார், கூடுதல் செயலாளர் சுபாஷ் சந்திரா, இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தின் தலைவர் சுவர்ண ராஜ், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசுகையில் கூறியதாவது: ‘இந்தியாவின் பாதுகாப்பு தளவாட உற்பத்தித்திறன், உலக அளவில் நமது நாட்டுக்கு மரியாதையை பெற்றுத் தந்துள்ளது. மேலும், நமது திறனை உலக நாடுகள் ஏற்றுக்கொண்டு உள்ளன. பாதுகாப்பு படைகளின் தேவைக்கு ஏற்ப பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஏவுகணைகளை உருவாக்கி தந்து உள்ளது.

இந்த ராணுவ கண்காட்சியின் மூலம், இந்தியாவின் பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் வளர்ச்சி ஏற்படுவதுடன், பாதுகாப்பு தளவாடங்களின் எண்ணிக்கையும், தரமும் அதிகரிக்கும்.
தொல்காப்பியத்தில், ஒரு ஆண்டை ஆறு கால நிலைகளாக பிரித்து, அதில் சித்திரை மாதமே இளவேனில் காலத்தின் தொடக்கமாக வைக்கப்பட்டு உள்ளது.

இதேபோல், சிலப்பதிகாரத்திலும் 12 ராசிகளில், முதல் ராசியாக, மேஷம் எனப்படும் சித்திரையே உள்ளது. இதை நாம் தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகிறோம். தமிழ் புத்தாண்டு போல, கேரளாவில் ‘விஷூ’வும், பஞ்சாபில் ‘பைசாகி’ விழாவும் கொண்டாடப்படுகிறது.

இன்று (நேற்று) சட்டமேதை அம்பேத்கரின் பிறந்த நாளாகும். அம்பேத்கர் சட்டமேதையாக இருந்தாலும், அவருக்கும், பாதுகாப்பு துறைக்கும் தொடர்பு உள்ளது. ஏனெனில், அவர் வெளிநாட்டில் மேற்படிப்பு முடித்தவுடன், பரோடா மன்னர் சயாஜிராவ் கெய்க்வாட் ராஜ்ஜியத்தில், பாதுகாப்பு செயலராக பணியாற்றினார். அதன் பின்னரே சட்டப்படிப்பை முடித்து, மும்பையில் வழக்கறிஞராக பணியாற்றினார். இவ்வாறு பன்வாரிலால் புரோகித் கூறினார்.

நிறைவு விழாவில், கண்காட்சியில், தன்னார்வலராக பணியாற்றிய, எஸ்.எஸ்.என். பொறியியல் கல்லூரி, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் மற்றும் வி.ஐ.டி. பல்கலைக்கழக மாணவர்களுக்கு சான்றிதழ்களை கவர்னர் வழங்கினார். முன்னதாக, சட்டமேதை அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி, அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

கண்காட்சியின் நிறைவு நாளை முன்னிட்டு, பொதுமக்கள் கண்காட்சியை இலவசமாக பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். காலை 9 மணிக்குத்தான் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டு இருந்தும் கூட, காலை 5 மணியில் இருந்தே பொதுமக்கள் கண்காட்சியை பார்வையிட வந்தனர்.

ராணுவ கண்காட்சியின் நிறைவு விழாவையொட்டி முப்படைகளின் சார்பில் சாகச நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஐ.ஏ.எஸ். அதிகாரி பியூலா ராஜேஷ் மற்றும் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா ஆகியோர் தலைமை தாங்கினார்கள். வெளிநாடுகள் மற்றும் நம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான கண்காட்சியாளர்கள், பொதுமக்கள் அமர்ந்து பார்வையிட்டனர்.

விமானப்படையின் டார்னியர் விமானங்கள், சேத்தக் ஹெலிகாப்டர்களில் வானில் பறந்து பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை விமானப்படை வீரர்கள் செய்து காட்டினர். கடற்கொள்ளையர்களிடம் சிக்கியவர்களை ஹெலிகாப்டர்கள் மூலம் விமானப்படை வீரர்கள் மீட்கும் நிகழ்ச்சி பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

முப்படையினரின் சாகச நிகழ்ச்சியில் 6 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டு இருந்த கண்காணிப்பு விமானமான டார்னியர் விமானத்தில் இருந்து 8 விமானப்படை வீரர்கள் பாராசூட்டை மாட்டிக்கொண்டு குதித்தனர். காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் அங்கும், இங்கும் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் சரியாக மேடை முன்பு தரை இறங்கினார்கள். அதில் ஒருவர் தேசிய கொடியை ஏந்தியபடி தரை இறங்கினார்.

ஹெலிகாப்டர்கள் சாகச நிகழ்ச்சியில் இந்தியாவில் தயாரிக்கப்படும் ஹெலிகாப்டர்களில் வீரர்கள் மேடைக்கு எதிர்புறம் வானில் வட்டமிட்டபடி பறந்து சாகச நிகழ்ச்சிகளை செய்து காண்பித்தனர். அதைத் தொடர்ந்து 3 டார்னியர் ரக கண்காணிப்பு விமானங்களின் அணிவகுப்பு நடந்தது.

ஆவடியில் தயாரிக்கப்பட்ட பீரங்கி வண்டிகளில் ராணுவ வீரர்கள் மணல் பரப்பில் சீறிப்பாய்ந்து வந்து சாகசங்களை செய்து காண்பித்தனர். இதில் 10 நிமிடத்தில் 20 அடி நீள பாலம் அமைக்கும் பீரங்கி வண்டிகள், 600 குதிரைத்திறன் கொண்ட பீரங்கி வண்டிகள், கமாண்டோ கண்ட்ரோல் ரக பீரங்கி வண்டிகள், அர்ஜூன் மார்க்-2 ரக பீரங்கி வண்டிகளில் வீரர்கள் சாகசங்களை செய்து காண்பித்தனர்.

தமிழ் புத்தாண்டு தினத்தன்று நடந்த இந்த சாகச நிகழ்ச்சிகள் பொதுமக்களுக்கு விருந்தாக அமைந்தது. சுமார் 3 லட்சம் பேர் ராணுவ கண்காட்சியையும், சாகச நிகழ்ச்சிகளையும் கண்டு களித்ததாக ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார். சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்ச்சியை தமிழகத்தில் ஏற்பாடு செய்த நிர்மலா சீதாராமனை பலரும் பாராட்டினர்.

 

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close