தமிழகத்தில் பா.ஜ.க நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு வருவது குறித்து ஆய்வு செய்ய வந்த டெல்லி மேலிட குழு, ஆளுனர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளித்தது.
சென்னையை அடுத்த பனையூரில் உள்ள அண்ணாமலை வீடு முன் பா.ஜ.க கொடிக்கம்பம் நிறுவப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில், கொடிக்கம்பம் நிறுவ அனுமதி பெறாததால், கொடிக்கம்பம் மாநகராட்சி அதிகாரிகளால் அகற்றப்பட்டது.
இதற்கு பா.ஜ.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்து, மாநகராட்சிக்குச் சொந்தமான ஜே.சி.பி மற்றும் கிரேன் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தினர். இந்த வழக்கில் பா.ஜ.க விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு பிரிவு மாநிலத் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், அமர் பிரசாத் ரெட்டி மேலும் 2 வழக்குகளில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து தமிழக பா.ஜ.க நிர்வாகிகள் கைது தொடர்பாக ஆய்வு டெல்லி தலைமை குழு அமைத்தது. சதானந்த கவுடா, சத்யபால் சிங், புரந்தேஸ்வரி, பி.சி மோகன் ஆகிய 4 பேர் அடங்கிய குழுவை பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி நடடா அறிவித்தார்.
இந்த குழு இரண்டு நாள் பயணமாக நேற்று (வெள்ளிக்கிழமை) சென்னை வந்தது. பா.ஜ.க கொடிக்கம்பம் அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக அண்ணாமலை இல்லத்தில் இந்தக் குழுவினர் ஆய்வு செய்தனர். பின்னர் கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.
பா.ஜ.க பிரதிநிதிகள், ஆளுநரை சந்தித்து, பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, மாநிலத்தில் காவல்துறையினரால், பா.ஜ.க மீது நடத்தப்படும் அட்டூழியங்கள் மற்றும் துன்புறுத்தல்களை எடுத்துக்காட்டி, மனு ஒன்றை அளித்தனர்.
மனுவில், தமிழ்நாட்டில் அரசியல் ரீதியாக பா.ஜ.க நிர்வாகிகள் கைதுச்செய்யப்படுகின்றனர். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டது.
மேலும், இந்தக் குழு இரண்டு நாள் ஆய்வு செய்த பின்னர் நாளை டெல்லி சென்று தேசிய தலைமையிடம் அறிக்கை அளிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“