தமிழக அரசின் புதுமைப் பெண் திட்டம் உள்பட 3 திட்டங்களின் தொடக்க விழாவில் பங்கேற்க டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஞாயிற்றுக்கிழமை சென்னை வந்தடைந்தார். அவரை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றார்.
தமிழக அரசின் 2022- 2023ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அரசுப்பள்ளிகளில் 6 முதல் 12 வரை பயின்ற மாணவிகளுக்கு, அவர்கள் உயர்கல்வி படித்து முடிக்கும் வரை மாதம் ரூ.1000 நேரடியாக வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என அறிவித்திருந்தது. இந்த திட்டத்திற்காக ரூ.698 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு 'புதுமைப்பெண் திட்டம்' என்று தமிழக அரசு பெயர்சூட்டி உள்ளது.
கடந்த முறை டெல்லி சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்தார். டெல்லி அரசுப் பள்ளிகளை பார்வையிட்டார்.
இதைத் தொடர்ந்து, தமிழக அரசின் புதுமைப் பெண் திட்டம் உள்பட 3 திட்டங்களின் தொடக்க விழாவுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.
தமிழக அரசு, செப்டம்பர் மாதம் 5ம் தேதி சென்னை ராயபுரம் பாரதி மகளிர் கல்லூரியில் இந்த திட்டத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி வைக்க உள்ளார்.
தமிழக அரசின் புதுமைப்பெண் திட்டம் உள்பட 3 திட்டங்களின் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விமானம் மூலம் ஞாயிற்றுக்கிழமை சென்னை வந்தடைந்தார். அவரை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை பாரதி மகளிர் கல்லூரியில் நடைபெறும் புதுமைப்பெண் திட்டம் தொடக்கவிழாவில் கலந்துகொண்டு திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இதையடுத்து, அரவிந்த் கெஜ்ரிவாலும் மு.க. ஸ்டாலினும் அறிஞர் அண்ணா நினைவு நூலகத்தை பார்வையிட்டு அரசு மாதிரி பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாட உள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"