70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவைத் கடந்த 5 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 699 வேட்பாளர்கள் களம் கண்டனர். ஆம் ஆத்மி, பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவியது. தேர்தலில் 60.54 சதவீத வாக்குகள் பதிவாகின.
இந்நிலையில், டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி, போட்டியிட்ட 70 தொகுதிகளில் பா.ஜ.க 47 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி 23 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பா.ஜ.க-வின் பர்வேஷ் வர்மாவிடம் தோல்வியடைந்தார். இதேபோல், டெல்லி முதல்வராக இருந்த அதிஷி பா.ஜ.க-வின் ரமேஷ் பிதுரியிடம் தோல்வியுற்றார். அதே நேரத்தில் மனிஷ் சிசோடியாவும் தர்விந்தர் சிங் மர்வாவிடம் தோற்றார்.
டெல்லியில் ஆட்சியை அமைக்க 70 தொகுதிகளில் 36 தொகுதிகளில் வெற்றி பெற்றால் போதுமானது. அந்த வகையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே முன்னிலை பெற்ற பா.ஜ.க 27 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்த பா.ஜ.க-வின் பர்வேஷ் வர்மா, டெல்லியின் அடுத்த முதல்வராக ஆகலாம் என்று தெரிகிறது.
டெல்லியில் கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக ஆட்சியில் இல்லாத பா.ஜ.க தற்போது மீண்டு அரியணை ஏறுகிறது. நீண்ட நாள் கனவாக இருந்த 'தலைநகர் டெல்லி' மீண்டும் பா.ஜ.க-வின் வசம் வந்துள்ளது. இந்த அமோக வெற்றியை தலைநகரில் உள்ள பா.ஜ.க தலைமையகத்தில் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். இதேபோல், மற்ற மாநிலங்களில் இருக்கும் தலைமை அலுவலகத்திலும் நிர்வாகிகள், தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அவ்வகையில், சென்னையில் உள்ள பா.ஜ.க அலுவலகமான கமலாலயத்தில் தொண்டர்கள் கூட்டம் அலைமோதியுள்ளது. அங்கு திரண்டிருக்கும் நிர்வாகிகள், தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் டெல்லி வெற்றியை கொண்டாடி தீர்த்து வருகிறார்கள். மேலும், தமிழக பா.ஜ.க தலைவர்கள் பலரும் பிரதமர் மோடிக்கும், பா.ஜ.க தலைமைக்கும் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.
இதற்கிடையில், தமிழகத்தில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது. இந்தத் தேர்தலில் தி.மு.க - நாம் தமிழர் கட்சி என இருமுனை போட்டி நிலவிய நிலையில், இன்று காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணத் தொடங்கியது முதலே தி.மு.க அதிரடியாக முன்னிலை பெற்றது. தபோதை நிலவரப்படி, நாம் தமிழர் கட்சியை விட 5 மடங்கு அதிக வாக்குகள் பெற்றுள்ளது தி.மு.க
10-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் தி.மு.க. வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் 63,984 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். மறுபுறம் நாம் தமிழர் கட்சியின் சீதா லட்சுமி 13,945 வாக்குகள் பெற்றுள்ளார். நோட்டாவுக்கு 2,940 வாக்குகள் கிடைத்துள்ளன.
இந்நிலையில், ஈரோடு கிழக்கில் தி.மு.க வேட்பாளர் முன்னிலை வகித்து வருவதால், அக்கட்சியின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள சென்னை அண்ணா அறிவாலயத்தில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசியலில் ஒரே நேரத்தில் தி.மு.க - பா.ஜ.க ஆகிய இருபெரும் கட்சிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருவது அரிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.