ஜி 20 நாடுகளுக்கு இந்தியா தலைமை வகிப்பதையொட்டி, நடத்தப்படும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மத்திய அரசு அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்துள்ளது.
அ.தி.மு.க-வில் ஜூன் 11 முதல் எடாப்பாடி பழனிசாமி - ஓ. பன்னீர்செல்வம் இடையே மோதல் நிலவி வருகிறது. அ.தி.மு.க பொதுக்குழு தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் அமர்வு, பொதுக்குழு தீர்மானப்படி, அ.தி.மு.க இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செல்லும் என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் இரண்டு தரப்புமே அ.தி.மு.க விவகாரத்தில் மத்தியில் ஆளும் பா.ஜ.க-வின் ஆதரவை எதிர்பார்த்து காய் நகர்த்தி வருகின்றனர். ஆனாலும், டெல்லி தலைமை யாருக்கு உதவும் என்பது கேள்வியாகவே இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில்தான், இந்தியா ஜி20 நாடுகளுக்கு தலைமை வகிப்பது குறித்து நடத்தப்படும் அனைத்துக் கட்சி தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்க அ.தி.மு.க இடைக்காலப் பொதுச் செயலாளர் இ.பி.எஸ்-க்கு அழைப்பு விடுத்து டெல்லி அவரை அங்கீகரித்துள்ளது. இதனால், ஓ.பி.எஸ்-க்கு அழைப்பு இல்லையா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
இந்தியா ஜி20 நாடுகளின் அமைப்புக்கு டிசம்பர் 1, 2022 முதல் நவம்பர் 30, 2023 வரை தலைமை வகிக்கிறது. இது தொடர்பாக டெல்லியில், ராஷ்டிரபதி பவன் கலாச்சார மையத்தில் நடைபெறும் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத ஜோஷி கடிதம் அனுப்பியுள்ளார்.
நாடாளுமன்ற விவகாரங்கள் துறை, நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் பிரகலாத ஜோஷி எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “இந்தியா ஜி20 நாடுகள் அமைப்புக்கு டிசம்பர் 1, 2022 முதல் நவம்பர் 30, 2023 வரை தலைமை வகிக்க இருப்பது மிகப் பெரிய சிறப்பான, பெருமையான விஷயம். இந்திய ஜி20 நாடுகள் அமைப்புக்கு தலைமை வகிக்கும் கால கட்டத்தில் இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் 32 துறைகள் குறித்து 200 கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது.
ஜி20 நாடுகள் அமைப்பின் சிறப்பு மன்றம் சர்வதேச ஒத்துழைப்புக்காக நிதி மற்றும் பொருளாதார நிகழ்ச்சிகள், உலக பொருளாதார உறுதித் தன்மை, சீரான வளர்ச்சியின் மூலம் உலகின் முக்கிய மேம்பட்ட வளரும் பொருளாதாரத்தை கொண்டுவந்து உலகத்தின் ஜி.டி.பி-யில் 90% பிரதிநிதித்துவம் செய்வது, உலக வர்த்தகத்தில் 80% பிரதிநிதித்துவம் செய்வது, உலக மக்கள் தொகையில் 2/3 பிரதிநிதித்துவம் செய்வது என்று திட்டமிடப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள ராஷ்டிரபதிபவன் கலாச்சார மையத்தில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டிசம்பர் 5-ம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் நாடாளுமன்றத்தில் பிரநிதித்துவம் உள்ள பல்வேறு அரசியல்கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தலைமைகள் கலந்துகொள்ள வேண்டும். உங்களுடைய மேலான வருகை இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க-வில் இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் இடையே மோதல் நிலவி வரும் நிலையில், பா.ஜ.க தலைமை டெல்லியின் ஆதரவு யாருக்கு என்ற கேள்விகளுக்கு விடை கிடைக்காமல் இருந்து வரும் நிலையில், அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு அ.தி.மு.க இடைக்காலப் பொதுச் செயலாளர் இ.பி.எஸ்-க்கு அழைப்பு விடுத்து டெல்லி அவரை அங்கீகரித்துள்ளது. இதனால், ஓ.பி.எஸ்-க்கு அழைப்பு இல்லையா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் அளிக்கும் அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்துகொள்ளும் கூட்டம் என்பதால், தற்போது அ.தி.மு.க இடைக்காலப் பொதுச்செயலாளராக உள்ளதால் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"