டெல்லியில் நடைபயிற்சியின்போது மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி.சுதாவின் தங்கச் செயினை மர்மநபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் சுதா தமிழ்நாடு இல்லத்தில் தங்கி இருக்கிறார். இந்நிலையில் இன்று (ஆக. 4) காலை 6 மணி அளவில் அவர் திமுக எம்.பி. சல்மாவுடன் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். இரண்டுபேரும் செக் தூதரகம் அருகே சென்று கொண்டிருந்தபோது ஹெல்மெட்டுடன் ஸ்கூட்டியில் வந்த அடையாளம் தெரியாத நபர் சுதாவின் 4.5 சவரன் தங்கச் செயினை பறித்துச் சென்றுள்ளார். இந்தச் சம்பவத்தில் சுதாவின் கழுத்தில் லேசான காயம் ஏற்பட்டிருக்கிறது.
இந்த சம்பவம் குறித்து சானக்யபுரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, குற்றவாளியை அடையாளம் காண சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் இதுதொடர்பாக அவர், உள்துறை அமைச்சரிடம் கடிதமும் அளித்துள்ளார். செயின் பறிப்பி ஈடுபட்ட நபர்களை விரைந்து கைது செய்யுமாறு அதில் சுதா வலிறுத்தி உள்ளார்.
இந்த பகுதி வெளிநாட்டு தூதரகங்கள் அதிகமாக இருக்கும் பகுதி என்பதால் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு நிறைந்தபகுதியாக உள்ளது. உயர் பாதுகாப்பு மண்டலமாக விளங்கும் பகுதியில் சுதா எம்.பியிடம் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.