Jaffer Sadiq | Delhi | டெல்லியில் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில், போதை பொருட்கள் தயாரிக்கப் பயன்படும் ரூ. 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 50 கிலோ சூடோஎபிடிரைன் என்கிற ரசாயனப் பொருள்கள் சிக்கியது.
இது தொடர்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கு மூளையாக முன்னாள் தி.மு.க. சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக் செயல்பட்டது தெரியவந்தது.
இந்த நிலையில் ஜாஃபர் சாதிக் தி.மு.க.வில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டார். மேலும், ஜாஃபர் சாதிக் தலைமறைவானார்.
இதையடுத்து அவர் ஜெய்ப்பூரில் கைது செய்யப்பட்டார். அவரிடம், போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணம் தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு சென்றுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
மேலும், ஜாஃபர் சாதிக்கை பட்டினம்பாக்கத்தில் உள்ள அவரது வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களுக்கு நேரடியாக அழைத்துச் சென்று போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து, ஜாஃபர் சாதிக் தொடர்புடைய 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும், இந்த வழக்கில் ஜாஃபர் சாதிக்கின் சகோதரர்கள் முகமது சலீம், மைதீன் ஆகியோரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
ஜாஃபர் சாதிக் தொடர்பான வழக்கு, டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இந்த நிலையில், போதைப் பொருள் கடத்தல் விழக்கில் ஜாஃபர் சாதித்கிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறைக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“