/indian-express-tamil/media/media_files/2025/03/22/KalVUBOWWUQEA2iq1Lmo.jpg)
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான முதல் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜேஏசி) கூட்டம் சனிக்கிழமை காலை தொடங்கியது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைக் காட்டும் வகையில், 4 முதலமைச்சர்கள் உட்பட அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களையும் வரவேற்றார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெறும் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் தனது வரவேற்பு உரையில் பேசிய ஸ்டாலின், தொகுதி மறுசீரமைப்பால் தென்னிந்திய மாநிலங்களின் நாடாளுமன்ற தொகுதிகள் குறையாது என்ற உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உறுதிமொழி "தெளிவற்றது" என்றார். மணிப்பூரின் தலைவிதியை தென்னிந்திய மாநிலங்கள் சந்திப்பதைத் தடுக்க பிரதிநிதித்துவத்திற்கான போராட்டம் மிக முக்கியமானது என்றும் ஸ்டாலின் எச்சரித்தார். "மணிப்பூர் 2 வருடங்களாக பற்றி எரிந்து கொண்டிருக்கிறது, மக்களின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுகின்றன, ஏனெனில் அவர்களிடம் குரல் எழுப்ப பிரதிநிதித்துவம் இல்லை," என்று ஸ்டாலின் கூறினார்.
இதனிடையே, கூட்டத்திற்கு தலைவர்கள் வரத் தொடங்கியதும், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மற்றும் பிற தலைவர்கள் சென்னையில் கருப்புக் கொடி போராட்டம் நடத்தினர். ஜே.ஏ.சி. கூட்டத்தை "நாடகம்" என்று அண்ணாமலை விமர்சித்தார். மேலும் கர்நாடகா மற்றும் கேரளாவுடனான காவிரி மற்றும் முல்லைப் பெரியாறு நதிநீர் பங்கீட்டு பிரச்னை குறித்து இருமாநில முதல்வர்களுடன் கூட்டங்களை கூட்டாததற்காக ஸ்டாலினை கடுமையாக சாடினார்.
"இந்திய கூட்டாட்சியை காக்கும் வரலாற்றின் மிக முக்கியமான நாள் இது. இந்திய ஜனநாயகத்தையும் கூட்டாட்சியையும் காப்பதற்கான முன்னெடுப்பே மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான இந்தக் கூட்டம். மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு, தமிழ்நாடு போன்ற மாநிலங்களை வெகுவாக பாதிக்கும் என்று ஸ்டாலின் கூறினார்.
மக்கள்தொகையை பல்வேறு சமூகநலத் திட்டங்கள் மூலமாகக் கட்டுப்படுத்திய நம்மைப் போன்ற மாநிலங்கள், அதன் காரணமாக நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை இழக்க நேரிடும் என்றும் ஸ்டாலின் கூறினார். மாநிலங்களில் தொகுதிகள் குறைந்தால் நிதி பெறுவதிலும் சிரமம் ஏற்படும். தொகுதி மறுசீரமைப்பு தென்னிந்திய மாநிலங்களை அரசியல் ரீதியாக பலவீனப்படுத்தும். தமிழ்நாடு 8 நாடாளுமன்றத் தொகுதிகளை இழக்கும் அபாயம் உள்ளது. இது வெறும் எண்ணிக்கை பற்றியதல்ல, நம் அதிகாரம் பற்றியது.
நாங்கள் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரானவர்கள் அல்ல; ஆனால்..!
தமிழ்நாட்டின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்தை சுட்டிக்காட்டிய ஸ்டாலின், நல்லாட்சி மாநிலங்கள் அவற்றின் வெற்றிக்காக தண்டிக்கப்படக்கூடாது என்றார். தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரானவர்கள் அல்ல நாங்கள். நியாயமான தொகுதி மறுசீரமைப்பே எங்கள் கோரிக்கை. எந்த சூழ்நிலையிலும் பிரதிநிதித்துவம் குறையக்கூடாது" என்றும் ஸ்டாலின் கூட்டத்தில் பேசினார். பாஜக தொடர்ந்து மாநில அதிகாரங்களை பலவீனப்படுத்தி வருவதாகக் குற்றம் சாட்டிய ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்கள் ஒற்றுமையை ஒரு தேசிய மாதிரியாக மாற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்."
"ஊழலை மறைக்கும் கூட்டம்" - பா.ஜ.க. கருப்புக் கொடி போராட்டம்
கர்நாடகா மற்றும் கேரளாவுடனான காவிரி மற்றும் முல்லைப்பெரியாறு நதிநீர்ப் பங்கீடு பிரச்னை குறித்து ஸ்டாலின் கூட்டங்கள் கூட்டாததற்கு கண்டனம் தெரிவித்து, தமிழ்நாட்டில் பா.ஜ.க. கட்சி கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தியது.
பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், இந்தக் கூட்டத்தை "ஊழலை மறைக்கும் கூட்டம்" என்று விமர்சித்தார்."தமிழ்நாட்டு மக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக" இந்தக் கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்பட்டதாக அவர் கூறினார்.
பா.ஜ.க. தேசிய செய்தித் தொடர்பாளர் சி.ஆர். கேசவன், "தி.மு.க.வின் ஊழல் நிறைந்த, தோல்வியுற்ற ஆட்சியிலிருந்து பொதுமக்களின் கவனத்தைத் திசைதிருப்ப ஒரு பிரிவினை தந்திரமாக" தொகுதி மறுசீரமைப்பு நாடகத்தை நடத்தி வருவதாக காட்டமாக விமர்சித்தார். தி.மு.கவின் பிளவுபடுத்தும் அரசியல், மக்களை தவறாக வழிநடத்துவது மற்றும் தவறான தகவல்கள் வழங்குவது ஆகியவை தி.மு.க.-வுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர் சாடினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.