வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளதால் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை முதல் அதிகனமழை வரை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து கண்காணித்திட மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் விரைந்துள்ளனர்.
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை முதல் அதிகனமழை வரை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தெற்கு வங்கக் கடல் பகுதியில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று (நவ 25) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
குறிப்பாக இன்று (நவ 26) அன்று மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களிலும் நாளை (நவ 27) கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 20 செ.மீட்டருக்கும் கூடுதலாக மழைப் பொழிவு ஏற்படக்கூடும் என்றும் அதில் தெரிவித்துள்ளது.
மேலும் கனமழையினை எதிர்கொள்ள பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நவ 22 மற்றும் நவ 25 ஆகிய தேதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்க மீன்வளத் துறை இயக்குநருக்கும் கடலோர மாவட்ட ஆட்சியர்களுக்கு நவ 23 அன்று அறிவுரை வழங்கப்பட்டது.
ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ள படகுகளில் 192 படகுகள் கரை திரும்பியுள்ளன. மேலும் ஏற்கனவே ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்றுள்ள படகுகள் அருகில் உள்ள துறைமுகங்களுக்குச் செல்ல ஆழ்கடலில் மீனவர்களுக்கு நவீன தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலம் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் உத்தரவின்படி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை. நாகப்பட்டினம் திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து கண்காணித்திட நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர் ஆகிய மாவட்டத்திற்கு கண்காணிப்பு அலுவலர்கள் விரைந்துள்ளனர்.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு. தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் குழுக்கள் திருச்சிராப்பள்ளி திண்டுக்கல் மாவட்டங்களிலும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் 2 குழுக்கள் சென்னை மற்றும் திருநெல்வேலி மாவட்டத்திலும் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.
இது தவிர தேவைக்கேற்ப சம்மந்தப்பட்ட மாவட்டங்களுக்கு உடனடியாக அனுப்பும் பொருட்டு தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 9 குழுக்களும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் குழுக்களும் தலைமையிடத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மாநில மற்றும் மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையங்கள் மூலம் கனமழை எச்சரிக்கை வரப்பெற்ற மாவட்டங்களில் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேலும், கனமழை எச்சரிக்கையினைத் தொடர்ந்து தாழ்வானப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரையின் பேரில் நிவாரண முகாம்களுக்கு செல்லுமாறும் வெள்ள பாதிப்பு ஏற்படாத மேடான மற்றும் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“