Advertisment

மத்திய அரசை கண்டித்து 11-ம் தேதி டெல்டா மாவட்டங்களில் கடை அடைப்பு: ஏ.கே.எஸ் விஜயன்

பாஜக மற்றும் கன்னட அமைப்புகளைக் கண்டித்தும், வரும் 11-ம் தேதி டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்புப் போராட்டமும், மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக மறியல் போராட்டமும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
கடை அடைப்பு:

கடை அடைப்பு:

காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறக்க வலியுறுத்தியும், கர்நாடகாவில் தொடர் போராட்டத்தை நடத்தி வரும் பாஜக மற்றும் கன்னட அமைப்புகளைக் கண்டித்தும், வரும் 11-ம் தேதி டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்புப் போராட்டமும், மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக மறியல் போராட்டமும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

தஞ்சாவூரில் திமுக விவசாய அணி மற்றும் காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், டெல்டாவில் எஞ்சியுள்ள குறுவை பயிரை காப்பாற்ற தேவையான தண்ணீரை கர்நாடகாவிடம் இருந்து பெறுவது, அனைத்து கட்சி, அமைப்புகளை ஒருங்கிணைத்து விவசாயிகளின் ஒற்றுமையை எடுத்துரைப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்துக்கு திமுக விவசாய அணி மாநிலச் செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான ஏ.கே.எஸ்.விஜயன் தலைமை வகித்தார். கூட்டத்தில், திருவையாறு தொகுதி எம்எல்ஏ துரை.சந்திரசேகரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ.சண்முகம், மாநில பொதுச் செயலாளர்கள் பி.எஸ்.மாசிலாமணி, சாமி.நடராஜன், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் நா.பெரியசாமி, காவிரி டெல்டா விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் கே.வி.இளங்கீரன், விவசாயிகள் கூட்டமைப்புத் தலைவர் தெய்வசிகாமணி உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்கங்களின் பிரிதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் ஏ.கே.எஸ்.விஜயன் தெரிவிக்கையில்; “நிகழாண்டு குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் சார்பில் குறுவை தொகுப்பு திட்டம் நிகழாண்டும் செயல்படுத்தப்பட்டதால், வழக்கத்தை விட கூடுதல் பரப்பளவில் குறுவை சாகுபடி நடைபெற்றது.

ஆனால், காவிரியில் கர்நாடக அரசு காவிரி நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பின்படி கொடுக்க வேண்டிய தண்ணீரை கொடுக்காததால், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியில் நேரடி விதைப்பு மற்றும் நடவு பயிர்கள் சுமார் 2 லட்சம் ஏக்கர் வரை காய்ந்து கருகி விட்டன.

எனவே, எஞ்சிய குறுவை பயிரை பாதுகாத்திடவும், சம்பா சாகுபடி பணிகளைத் தொடங்கிடவும் தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு கொடுக்க வேண்டிய காவிரி நீரை வழங்க வலியுறுத்தி, காவிரி டெல்டா மாவட்டங்களில் பல கட்டப் போராட்டங்கள் நடைபெற்றன. தற்போது கர்நாடக அணைகளில் 80 சதவீதத்துக்கும் அதிகமான தண்ணீர் உள்ள நிலையில், தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கக் கூடாது என கர்நாடகத்தில் இரண்டு முறை முழு அடைப்பு போராட்டத்தை பாஜக மற்றும் கன்னட அமைப்புகள் நடத்தின.

காவிரி டெல்டா மாவட்டங்களில் எஞ்சியுள்ள குறுவைப் பயிரை பாதுகாக்கவும், சம்பா சாகுபடி தொடங்கவும் உடனடியாக காவிரியில் மாத வாரியாக கொடுக்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு வழங்க வலியுறுத்தி காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் அக்.11-ம் தேதி முழு அடைப்பு மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் முன் மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பின்படி காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறக்க வேண்டும். கர்நாடகத்தில் போராட்டத்தைத் தூண்டிவிட்டு போராட்டம் நடத்தி வரும் பாஜக மற்றும் கன்னட அமைப்புகளைக் கண்டித்தும், எஞ்சிய குறுவைப் பயிரை பாதுகாத்திட, சம்பா சாகுபடியை தொடங்கிட, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை திறக்க காவிரி ஆணையம் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியும், தமிழக அரசு பல முறை மத்திய அரசிடம் வலியுறுத்திய பின்பும் கண்டுகொள்ளாமல் செயல்படும் பாஜக அரசை கண்டித்தும் நடைபெறவுள்ள இப்போராட்டத்துக்கு அனைத்து அரசியல் கட்சிகள், வணிகர் சங்கங்கள், அனைத்து விவசாய மற்றும் விவசாய தொழிலாளர் சங்கங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

பின்னர் இந்தப் போராட்டம் தொடர்பான விளக்க கையேடுகளை திருச்சி, தஞ்சை, அரியலூர், திருவாரூர், நாகை மாவட்டங்களின் வணிகர் பிரதிநிதிகள், பல்வேறு அமைப்புகளிடம் விவசாய சங்க பிரதிநிதிகள் கொடுத்து முழு கடையடைப்பு வெற்றி பெற ஆதரவு கேட்டு வருகின்றனர்.

செய்தி: க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

TAMILNEWS
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment