மு.க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் புதிதாக அமைச்சராக இணைகிறார் மன்னார்குடி எம்.எல்.ஏ. டி.ஆர்.பி. ராஜா. முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவின் மகனாக இவருக்கு தொழில்துறை வழங்கப்பட்டுள்ளது.
எனினும் அவரின் பதவியேற்பு விழா, சொந்த டெல்டா மாவட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், திருவையாறு தொகுதி எம்.எல்.ஏ துரை. சந்திரசேகரன், திருவாரூர் எம்.எல்.ஏ பூண்டி கலைவாணன், அரசு கொறடா கோ.வி.செழியன் உள்ளிட்ட டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க எம்.எல்.ஏ-க்களிடையே அமைச்சர் பதவியைப் பிடிக்க கடும் போட்டி நிலவியது.
இவர்களை டி.ஆர்.பி ராஜா பின்னுக்கு தள்ளியுள்ளார். இதுதான் இன்றைய பிக்கல் பிடுங்கலுக்கு காரணம். இது குறித்து தி.மு.க வட்டாரத்தில் பேசினோம், ``தி.மு.க ஆட்சியைப் பிடித்ததுமே அமைச்சரவையில் டி.ஆர்.பி.ராஜா இடம் பிடிப்பார் எனப் பெரிதாகப் பேசப்பட்டது. டெல்டா மாவட்டத்தில் அமைச்சர் பதவிக்கான ரேஸில் இருந்த பலர் தன்னை அமைச்சராக்க வலியுறுத்தி திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு அழுத்தம் கொடுத்தனர்.
குறிப்பாக பூண்டி கலைவாணன் தனக்கிருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி அமைச்சராகிவிட வேண்டும் என தீவிரமாக செயல்பட்டார். ஒரு பக்கம் டி.ஆர்.பாலு தன் மகன் டி.ஆர்.பி.ராஜாவை எப்படியும் அமைச்சராக்கிவிட வேண்டும் என ஸ்டாலினுக்கு அருகிலிருந்து அழுத்தம் கொடுத்து வந்தார். இந்த நெருக்கடியான சூழலைத் தவிர்க்க டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த யாருக்கும் அமைச்சர் பதவியை கடந்த 2 ஆண்டுகளாக வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்” என்றார்.
இதற்கிடையில், மகன் அமைச்சராக அறிவிக்கப்பட்ட பின்னர், எதிர்ப்பு கிளம்பாமல் இருப்பதற்காக டெல்டாவில் அமைச்சர் ரேஸில் இருக்கும் சீனியர்கள் சிலரை டி.ஆர்.பாலு சமாதானம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமீபத்தில் உதயநிதி திருவாரூர் வந்தபோது, அவரை குதிரை வண்டியில் ஏற்றிக்கொண்டு வலம் வந்து, தன் பலத்தை நிரூபித்தார் பூண்டி கலைவாணன் என்பது நினைவு கூரத்தக்கது.
செய்தியாளர் க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“