கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையை அடுத்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணையின் முழு கொள்ளளவான 120 அடியில் நூற்று பத்து அடியை கடந்து தண்ணீர் நிரம்பி இருக்கிறது. இதனை அடுத்து மேட்டூர் அணையில் இருந்து இன்று பிற்பகல் 3 மணிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. முன்னதாக, மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனையைத் தொடர்ந்து, மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக நீர் திறக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதை அடுத்து மேட்டூர் அணை இன்று மாலை திறக்கப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை அமைச்சர் கே என் நேரு திறந்து வைத்தார். முதற்கட்டமாக 12,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
குறுவைப் பயிர்களுக்கும், ஆடிப் பெருக்கு விழாவை மக்கள் கொண்டாடவும், ஏரிகள் மற்றும் குளங்களில் நீர் சேமிப்பதற்கு ஏற்றவாறு அணை திறக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த நீரை விவசாயிகள் நல்ல முறையில் பயன்படுத்தவும், ஏரிகள் மற்றும் குளங்களில் நீரை சேமித்து வைக்கவும், நிலத்தடி நீரை செறிவூட்டவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் பல்வேறு துறை அலுவலர்களுக்கு முதல்வர் அறிவுரை வழங்கியுள்ளார்.
குறிப்பாக, ஆடிப்பெருக்கு விழாவிற்காக ஆற்றங்கரைகளில் மக்கள் கூடும் இடங்களில் அறிவிப்புகளை வைத்து, தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமெனவும், காவிரி கரையில் செல்பி எடுப்பதை தவிர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் சிறப்பு ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டுமெனவும், திறந்து விடப்படும் நீரைச் சேமித்து வைப்பது மற்றும் பயன்படுத்துவது குறித்து நீர்வளத் துறையும், மாவட்ட ஆட்சியர்களும் கவனமாகத் திட்டமிட்டுச் செயலாற்ற வேண்டுமெனவும், அதிக அளவு நீர் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளதால் காவிரி கரையோரங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்திட வேண்டுமெனவும் முதல்வர் அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்