புற்றீசல் போல் வளரும் தாமரை வளர்ப்பு விவசாயம்.. குமரியில் தடை செய்யப்படுமா?
கன்னியாகுமரி மாவட்ட குளங்களில் தாமரை வளர்க்க தடை விதிக்க வேண்டும் என்றும் இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தாமரை வளர்ப்பு விவசாயத்தை தடை செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.
திருவிதாங்கூர் மன்னரின் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்தது குமரி மாவட்டம். அந்தக் காலத்தில் இங்கு 4000க்கும் அதிகமான குளங்கள் இருந்தன. மேலும், திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் "நெற்களஞ்சியமாக குமரி மாவட்டம் திகழ்ந்ததால் மன்னர் ஆட்சி காலத்தில் குமரிக்கு"நாஞ்சில் நாடு"என்ற சிறப்புப் பெயரும் பெற்றிருந்தது.
Advertisment
சுதந்திர இந்தியாவில் மக்களாட்சி காலத்திலும் குமரி மாவட்டம் கேரள மாநிலத்தின் ஒரு பகுதியாகவே இருந்தது. இந்த நிலையில், மத்திய அரசின் மொழிவழி மாநிலங்கள் என்ற திட்டத்தின் அடிப்படையில் குமரி மாவட்டம்.1956 நவம்பர் 1ஆம் நாள் தமிழகத்தோடு இணைந்தது.
குமரியின் பிரதான விவசாயசங்கள் வரிசையில் நெல், தேங்காய், ரப்பர்,வாழை, மீன்பிடித்தல் என்ற வரிசையில் பிற்காலத்தில் குளங்களில் மீன் பிடித்தல், தாமரை வளர்ப்பு எனத் தொடங்கியது. குளங்களில் மீன்பிடி தொழில் செய்பவர்கள் உள் நாட்டு மீனவர்கள் என்ற அடையாள பெயரால் அழைக்கப்பட்டனர். இந்த உள் நாட்டு மீனவர்கள் தேவஸ்தானத்திற்கு பாத்திய பட்ட குளங்கள் நீங்கலாக. ஏனைய குளங்களை குத்தகைக்கு எடுத்து மீன் பிடித்து வந்தனர்.
இந்நிலையில் உள்நாட்டு மீனவர்களுக்கு பிரச்னை குளங்களில் தாமரை வளர்ப்பு விவசாயிகளால் ஏற்பட்டது. சிலருக்கு வேலை வாய்ப்பு என்ற நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் குறைந்த எண்ணிக்கையிலான குளங்களை தாமரை விவசாயிகளுக்கு ஒதுக்கினார்கள்.
தாமரை விவசாயிகளுக்கு ஏலம் விடும் குளங்களின் உரிமை, வருவாய் அந்த பகுதி பஞ்சாயத்திற்கு என ஒதுக்கப்பட்டது. கால ஓட்டத்தில் தாமரை விவசாயம் மிகுந்த லாபம் ஈட்டும் தொழிலாக மாறியது. தொடர்ந்து, பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தாமரை விவசாயத்திற்காக குளங்கள் அதிகரிக்க அதன் எதிர் வினையாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஹைபிரிட் தாமரை விதைகள் பயன்படுத்தப்பட்டன.
இதன் காரணமாக அவை செழித்து வளர ரசாயன உரங்களை தாமரை விவசாயிகள் பயன் படுத்த தொடங்கினர். இந்த, ரசாயன உரங்களை பயன்படுத்திய விளைவாக தாமரை இலைகள் அழுகி நீர்நிலை மாசுப்பட்டது. அத்துடன் குளங்களில் உள்ள மீன்கள் செத்து மிதக்க தொடங்கின. இந்த மீன்களை குளங்களில் இருந்து அப்புறப்படுத்தாததால், அதிலிருந்து வீசும் துர்நாற்றம் காற்றில் பரவி காற்றை மாசுபடுத்தி பொது மக்களுக்கும் சுகாதார கேட்டை ஏள்படுத்தியது.
இந்த நிலையில், தாமரை பூ வளர்ப்பு விவசாயத்தின் கேடு பற்றி 15 ஆண்டுகளுக்கு முன்பு குளங்களில் ஏற்பட்ட இத்தகைய மாசுபாடு நிலைக்கு எதிராக இதனை எதிர்த்து இன்டாக் அமைப்பு சார்பில் லால்மோகன். பூமி பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் மனோதங்கராஜ் ( தமிழக அரசின் தற்போதைய அமைச்சர்) பத்மதாஸ், பேச்சிப்பாறை விவசாய சங்க தலைவர் வின்ஸ்ஆன்றோ ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
கன்னியாகுமரியில் தாமரை விவசாயத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்த நபர்கள்.
குமரி மாவட்ட குளங்களில் தாமரை வளர்ப்பதால் நீர் நிலைகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. குளங்களை தாமரை வளர்க்க பொதுப்பணித்துறை தடை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து தாமரை வளர்ப்பு கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் சில ஆண்டுகளுக்கு பின் இந்த சட்டத்தை மதிக்காது மீண்டும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சிலரை அணுகி அவர்களுக்கு கொடுக்கவேண்டியதை கொடுத்து குமரியில் தாமரை வளர்ப்பு விவசாயம் புற்றீசல் போல் வளர்ந்தது.
இந்த நிலையை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பொது மக்கள் மத்தியில் இருந்து எழுந்துள்ளது. இது குறித்து, லால் மோகனிடம் கேட்டபோது, “குமரியில் முன்பு 4000க்கும் அதிகமான குளங்கள் இருந்ததில் இப்போது 2500 குளங்கள் மட்டுமே எஞ்சியுள்ளது. இதில் 500க்கும் அதிகமான குளங்களில் பொது ஏலம் இல்லாது சில பொதுப்பணித்துறை அதிகாரிகள் அவர்களது பொருளாதார வளத்தை பெருக்கி கொள்ள உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி செயல் பட்டு தாமரை வளர்ப்பதால் கடந்த சில ஆண்டுகளாக இத்தகைய குளங்களில் தாமரை படர்ந்து குளத்தின் நீரே வெளியே தெரியாமல் உள்ளதுடன் தண்ணீர் மாசடைந்து அழிந்து போகும் நிலை ஏற்படும் அபாயமும் உள்ளது.
மாவட்டத்தில் தேரூர், சுசீந்திரம், புத்தளம் போன்ற நீர்நிலைகளை அரசு பறவைகள் சரணாலயமாக அறிவித்துள்ள நிலையில். பொதுப்பணித்துறை அதிகாரிகளின் பேராசைக்கு இத்தகைய குளங்களை பலி ஆகும் நிலையை போக்க உச்ச நீதிமன்றமும் தாமாக முன்வந்து இந்த இந்த வழக்கை எடுத்து விசாரிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil