திருச்சி மாவட்டத்தில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்களில் மீன் பிடிக்க பொது ஏலம் விடுவதைத் தடை செய்ய வேண்டும் என்று தண்ணீர் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து திருச்சி தண்ணீர் அமைப்பின் செயல் தலைவர் கே.சி.நீலமேகம், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ” திருச்சி மாவட்டத்தில் அனைத்து ஏரிகள் மற்றும் குளங்களில் தண்ணீர் உள்ள நிலையில் மீன் பிடிக்க ஏலம் விட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனை மாவட்ட ஆட்சியர் தடுத்து நிறுத்த வேண்டுகிறோம். புதிய கட்டளைமேட்டு வாய்க்காலில் வரும் தண்ணீர் மூலமாக நிரம்பும் குளங்கள் அனைத்தையும் ஏலம் விடுவதாக தெரிகிறது.
விவசாயத்திற்கும், பறவைகளுக்கும் நிலத்தடி நீர் உயர்வதற்கும் இந்த குளங்களில் உள்ள தண்ணீர் பயன்படுகிறது.
எனவே, மாவட்ட நிர்வாகம் மீன் பிடிக்க குளங்களை ஏலம் விடுவதை தடை செய்ய வேண்டுகிறோம்.
குறிப்பாக, புதிய கட்டளைமேட்டு வாய்க்கால் – பிரிவு – 1 மூலம் வரும் தண்ணீர் நிரம்பும் கணக்கன் குளத்தின் கீழ் 240 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறுகிறது. இது போல மாவடிக்குளம், சாத்தனூர் பெரியகுளம், செங்குளம் போன்ற பல குளங்கள் உள்ளது. அவற்றின் மூலமாக பல நூறு ஏக்கர் நிலம் விவசாயம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில் குளத்தை ஏலம் எடுப்பவர் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தண்ணீரை நிறுத்தி வைத்து விடுவார் அல்லது மீன்கள் பிடிக்க வேண்டும் என அனைத்து தண்ணீரையும் திறந்து வெளியேற்றி விடுவார்.
இதனால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப் படுவார்கள். எனவே, மாவட்ட நிர்வாகம் விவசாயிகளையும், பொதுமக்களையும், நீர் ஆதாரங்களை காக்கவும் உடனடியாக குளங்களை ஏலம் விடுவதை தடை செய்ய வேண்டும்” என தண்ணீர் அமைப்பு மற்றும் மக்கள் சக்தி இயக்கம் சார்பாக கேட்டுக் கொண்டுள்ளார்.
நிலையில் நாளை திருச்சி மாவட்டத்தில் உள்ள சில குளங்களில் மீன் பிடிக்க ஏலம் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/