/indian-express-tamil/media/media_files/2025/06/20/trichy-siva-2025-06-20-14-24-25.jpg)
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியம் விளானூர் ஊராட்சியை சேர்ந்த திமுக மாநில சட்ட திட்ட திருத்தக்குழு முன்னாள் உறுப்பினரும், திமுக பவள விழாவில் அண்ணா விருது பெற்றவருமான மிசா இராமநாதன் கடந்த ஜூன் 18 ஆம் தேதியன்று உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
அவரது மறைவையொட்டி நேற்றையத் தினம் இரங்கல் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த இரங்கல் கூட்டத்தில் தமிழக நகராட்சித்மைச்சர் கே.என்.நேரு, கனிமவளத்துறை அமைச்சர் ரகுபதி, கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன், திருச்சி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே,செல்வ பாண்டியன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த இரங்கல் கூட்டத்தில் கலந்து கொண்ட ராஜ்யசபா எம்பியும், திமுகவின் துணை பொதுச் செயலாளருமான திருச்சி சிவா கலந்து கொண்டு மிசா இராமநாதன் குறித்து தனது நினைவலைகளை பகிர்ந்தார்.
அப்போது உணர்ச்சிவசப்பட்ட ராஜ்யசபா எம்பி திருச்சி சிவா, "மறைந்த மிசா இராமநாதன் 50 ஆண்டுகளுக்கு முன்பு சிறைக்கு செல்லும் பொழுது தன்னை பக்கத்தில் படுக்க வைத்து தைரியம் சொன்னவர்" எனக்குறிப்பிட்டு மிசா இராமநாதன் புகழைப் பேசும் பொழுது கண்ணீர் விட்டு அழுதார்.
மேற்கொண்டு பேச முடியாமல் மேடையிலேயே தலை குனிந்து தேம்பி தேம்பி அழத் தொடங்கினார். அருகிலிருந்த கட்சி நிர்வாகிகள் எம்.பி திருச்சி சிவாவினை சமாதானப்படுத்தினர். இந்த காட்சி அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்தது.
முன்னதாக, முதல்வர் ஸ்டாலின் மிசா இராமநாதன் மறைவினையொட்டி தனது இரங்கல் குறிப்பினை வெளியிட்டார். அதில், "தலைமைக் கழக தீர்மானக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் மிசா இராமநாதன் மறைந்த செய்தி அறிந்து வேதனையடைந்தேன்.
நெருக்கடி நிலையை நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டு திருச்சி மத்தியச் சிறையில் ஓராண்டுகாலம் தண்டனை அனுபவித்து 'மிசா இராமநாதன்" எனப் பெயர் பெற்ற தீரர்.
இத்தகைய நீண்டகாலப் பொதுவாழ்வுக்குச் சொந்தக்காரரான மிசா இராமநாதன் அவர்களின் பணிகளைப் பாராட்டி கடந்த ஆண்டு கழக பளவ விழா நிறைவு முப்பெரும் விழாவில் பேரறிஞர் அண்ணா விருது வழங்கிச் சிறப்பித்திருந்ததை இப்போது நினைவுகூர்கிறேன்" என முதல்வர் ஸ்டாலின் தனது இரங்கல் குறிப்பில் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.