பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் இந்து சமய அறநிலயத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு தமிழகம் மட்டுமில்லாமல் கேரளாவை சேர்ந்த பெண் பக்தர்களும் இருமுடி கட்டுடன் வந்து அம்மனை தரிசித்து செல்வார்கள்.
Advertisment
ஆகவே இந்தக் கோயில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி பெரும் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10-நாள்கள் நடைபெறுவது வழக்கம்.
இந்த திருவிழாவின் போது ஹைந்தவ ஹிந்து சேவா சங்கம் சார்பில் 10-நாள்கள் சமய மாநாடு நடைபெறுவது வழக்கம். இது கிட்டத்தட்ட 85 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
இந்த வருட மாசி திருவிழா மார்ச் மாதம் 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள நிலையில் ஹைந்தவ ஹிந்து சேவா சங்கம் சார்பில் நடத்தப்படும் சமய மாநாட்டிற்கு இந்து சமய அறநிலையத்துறை தடை விதித்தது
இந்த நிலையில் 85-வருட பாரம்பரிய நிகழ்வான சமய மாநாட்டிற்கு தடை விதித்த இந்து சமய அறநிலையத்துறையை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்பாட்டம் நடத்த இந்து அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன.
அதில் ஒருபகுதியாக நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு பகுதியில் நாகர்கோவில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் பெண்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது.
செய்தியாளர் த.இ. தாகூர்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/