கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மாவட்டத்தின் குவாரிகளில் இருந்து மலைகளைக் குடைந்து பாறைகள் கொண்டு செல்லப்பட்டு வந்தன.
இதனால் குமரி மாவட்டத்தின் கனிம வளங்கள் பாதிக்கப்பட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து அனுமதி இல்லாத குவாரிகள் நிறுத்தப்பட்டன.
இதற்கிடையில், வெளி மாவட்டங்களில் இருந்து கேரளாவிற்கு கனரக வாகனங்களில் பாறைகள் கன்னியாகுமரி மாவட்ட வழியாக சென்றன.
இதனால் சாலைகளில் விபத்துகள் ஏற்பட்டு ஏராளமான உயிர் பலிகள் நடந்தன. இதையடுத்து, 10 டயர் உள்ள கனரக வாகனங்கள் செல்ல கூடாது என தமிழக அரசும் நீதிமன்றமும் தெரிவித்தது.
தொடர்ந்து, சில காலங்கள் அவ்வழியாக செல்லாமல் இருந்தன. மீண்டும் அனுமதி பெற்று வாகனங்கள் இறச்சகுளம் வழியாக திருவனந்தபுரம் சென்று வருகின்றன.
இந்த நிலையில், புதன்கிழமை (அக்.11) இறச்சகுளம் அமிர்தா கல்லூரி வழியாகச் சென்ற கனரக லாரியில் இருந்த நான்கு டன் பாறை அவ்வழியில் உள்ள அரசு பள்ளி முன்பு விழுந்தன.
அப்பகுதியினர் இதனைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இன்று காலை நேரம் என்பதால் பள்ளி செல்லும் மாணவ- மாணவிகள், கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகள் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் என பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
போலீசார் அவர்களை கலைந்து செல்ல வலியுறுத்தினார்கள். எனினும் ஆர்ப்பாட்டம் சுமார் 1 மணி நேரம் நீடித்தது.
செய்தியாளர் த.இ. தாகூர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“