தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 5 பேர், பன்றிக்காய்ச்சலுக்கு 11 பேர் பலி - சுகாதாரத்துறை

கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில் அவர்கள் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தனர்

தமிழகத்தில் இந்த வருடம் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 5 பேர் உயிரிழந்திருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. அதனைக் கட்டுப்படுத்த தீவிர தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எனினும், ஒரு சில இடங்களில் காய்ச்சலின் வீரியம் அதிகமாக உள்ளது. நேற்று ஒரே நாளில் பன்றிக் காய்ச்சலுக்கு 4 பெண்கள் பலியாகி உள்ளனர்.

சென்னை மாதவரம் சந்தோஷ்நகர் பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் – கஜலட்சுமி தம்பதியின் 7 வயது இரட்டை குழந்தைகளான தக்சன், தீக்சா ஆகியோர் டெங்கு காய்ச்சலுக்காக எழும்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில் அவர்கள் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தனர்.

இதுபோல் சேலம் அரசு மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் 2 பேருக்கு தனிவார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னை எழும்பூரில் தமிழக சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு இன்று அளித்துள்ள பேட்டியில், தமிழகத்தில் இந்த வருடம் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 5 பேரும், பன்றி காய்ச்சலுக்கு 11 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், ‘காய்ச்சல் வந்தவுடன் சிகிச்சை பெற வேண்டும். காய்ச்சலுக்கு போலியான மருந்து வழங்கிய 840 பேர் பிடிபட்டுள்ளனர். டெங்கு போன்ற காய்ச்சல் பாதிப்பினை எப்படி கையாள்வது என்பது பற்றி தனியார் மருத்துவர்களுக்கு நாளை ஆலோசனை வழங்கப்பட உள்ளது’ எனவும் சுகாதாரத்துறை செயலாளர் கூறினார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close