டெங்கு காய்ச்சலுக்கு, சென்னையில் ஒரு சிறுமி, உடுமலைப்பேட்டையில் ஒரு சிறுமி, கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவர் டெங்கு காய்ச்சலுக்கு மரணமடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பருவ மழை தொடங்கியதோடு கூடவே டெங்கு காய்ச்சலும் பரவி வருகிறது. ஆண்டுதோறும் டெங்கு காயச்சல் தாக்கத்தினால் சில உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சல் என்பது நேரடியாக உயிரிழப்பை ஏற்படுத்தாது, முன் கூட்டியே அதற்கான சிகிச்சையை எடுத்துக்கொண்டால் அதைக் குணப்படுத்த முடியும் என பல்வேறு விழிப்புணர்வுகளிலும் கூறி வருகின்றனர்.
கும்பகோணத்தை அடுத்த திருநாகேஸ்வரத்தை சேர்ந்த சூர்யா, தமிழ்ச்செல்வன் மற்றும் பார்த்திபன் ஆகியோர், சென்னை மறைமலை நகர் பகுதியில் உள்ள ஹாஸ்டலில் தங்கியபடி, தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். இவர்களுக்கு திடீரென்று காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து டாக்டரிடம் காட்ட, டெங்கு அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் உடனடியாக, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இருவர், அங்கு டெங்கு காய்ச்சல் அறிகுறிகளோடு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
300 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி : சென்னையில் 300க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறிகளோடு, சிகிச்சை பெற்று வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.இதையடுத்து தமிழகம் முழுவதும் நகராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, டெங்கு காய்ச்சல் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.