வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே நாராயணபுரம் தலித் மக்களுக்கு, பாலாற்றுக் கரையோரம் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய சுடுகாட்டுப் பாதை மறுக்கப்பட்டதால், 20 அடி உயர பாலத்தில் இருந்து இறந்தவரின் உடலை கயிறு கட்டி கீழே இறக்கி உடலை அடக்கம் செய்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேலும், கடந்த 4 ஆண்டுகளாக இப்படி பாலத்திலிருந்து உடலை கயிறு கட்டி இறக்கி அடக்கம் செய்துவருவது தெரியவந்துள்ளது.
வேலூர் மாவட்டம், வாணியம்பாடி டவுன் அருகே நாராயணபுரம் தலித் காலனி. இந்த ஊரைச் சேர்ந்த குப்பன் என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை சாலை விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு சனிக்கிழமை அவரது குடும்பத்தாரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடலை அடக்கம் செய்ய சென்றபோதுதான் சுடுகாட்டுப் பாதை மறுக்கப்பட்டதால் பாலத்திற்கு கீழே இருக்கும் சுடுகாட்டுக்கு உடலை பாலத்திலிருந்து கயிறுகட்டி கீழே இறக்கி அடக்கம் செய்துள்ளனர்.
பாலாற்றுக் குறுக்கே அரசலந்தபுரம் - நாராயணபுரம் இடையே பாலம் கட்டிய பிறகு, மற்ற சாதியினர் ஆற்றுக்கு செல்லும் பாதையை ஆக்கிரமித்துள்ளனர். மேலும், அவர்கள் தங்களுடைய விவசாய நிலங்கள் வழியாக தலித்துகள் சுடுக்காட்டுக்கு இறந்தவரின் உடலை எடுத்துச் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனுமதி மறுத்துள்ளனர்.
இதனால், அவ்வழியாக குப்பனின் உடலை எடுத்துச் செல்வது தொடர்பாக அங்கே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தலித் பகுதியைச் சேர்ந்த ஊர் பெரியவர்கள் பிரச்னை வேண்டாம் என்று பாலத்துக்கு கீழே இருக்கும் ஆற்றில் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய, உடலைக் கயிறு கட்டி இறக்கி அடக்கம் செய்வது என்று முடிவெடுத்து அவ்வாறே உடலை 20 அடி உயர பாலத்திலிருந்து கயிறு கட்டி இறக்கி அடக்கம் செய்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ, மற்றும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது. இதற்கு முன்பு இறந்த 4 பேரின் உடல்களை இதே போல, பாலத்திலிருந்து கயிறு கட்டி இறக்கி அடக்கம் செய்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
21 ஆம் நூற்றாண்டில் சமூகநீதியில் முற்போக்கான மாநிலம் என்று கூறப்படும் தமிழகத்தில் இது போல தலித்துகளுக்கு பொதுப்பாதை, சுடுகாட்டுப் பாதை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும் சம்பவங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.