நீட் தேர்வில் தேர்ச்சிப் பெறாமல் பல் மருத்துவ படிப்பில் சேர்க்கப்பட்ட 8 மாணவர்களுக்கு தலா 25 லட்சம் இழப்பீடு வழங்க தனியார் மருத்துவ கல்லூரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
சென்னை மதுரவாயிலில் உள்ள சவீதா பல் மருத்துவ கல்லூரியில் 8 மாணவர்கள், பல் மருத்துவ படிப்பில் கடந்த கல்வி ஆண்டில் சேர்க்கப்பட்டனர். இவர்கள், அனைவரும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான இடஒதுக்கீட்டின் கீழ் கல்லூரியில் சேர்க்கப்பட்டனர். இவர்கள் யாரும் நீட் தேர்வு எழுதாமல் இவர்களுக்கு இடம் அளிக்கப்பட்டது. எனவே, இவர்களது சேர்க்கைக்கு ஒப்புதல் அளிக்க இந்திய பல்மருத்துவ கவுன்சில் மறுத்து விட்டது. நீட் தேர்வில் தேர்ச்சிப் பெறாமல், மருத்துவ படிப்பில் யாரையும் சேர்க்க முடியாது என்று உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து 8 மாணவர்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அப்போது பல்மருத்துவ கவுன்சில் சார்பில் ஆஜரான வழக்கில் நீட் தேர்வில் வெற்றிப் பெறாமல், 'எந்த ஒரு மாணவனையும் மருத்துவ கல்வியில் அனுமதிக்க முடியாது. இந்த 8 மாணவர்களும் நீட் தேர்வில் பங்கேற்கவில்லை. அதனால், இந்த விஷயத்தில், பல் மருத்துவ கவுன்சிலினால் எதுவும் செய்ய முடியாது. இவர்களது சேர்க்கைக்கு ஒப்புதலும் அளிக்க முடியாது’ என்று வாதிட்டார்.
இதையடுத்து, இந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி வைதியநாதன், 8 மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக அமைந்து விட்டது. அதனால், அந்த 8 மாணவர்களுக்கும் தலா 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தனியார் கல்லூரி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார்.