யூடியூபர் இர்ஃபான் தனது மனைவியின் பிரசவத்தின் போது குழந்தையின் தொப்புள்கொடியை வெட்டுவது போன்ற வீடியோவை சமீபத்தில் பதிவேற்றியிருந்தார். இந்த வீடியோ தொடர்பாக பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், சம்பந்தப்பட்ட வீடியோவை நீக்க வேண்டுமென மருத்துவ மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இயக்குநர் ஜே.ராஜமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில், குழந்தையின் தொப்புள் கொடியை இர்ஃபான் வெட்டுவது போன்ற வீடியோவை தான் பார்த்ததாக தெரிவித்துள்ளார். பயிற்சி பெற்ற மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆகியோர் தான் இப்பணியைச் செய்ய வேண்டுமென குறிப்பிட்டுள்ள அவர், இர்ஃபான் இந்த செயலில் ஈடுபட்டிருக்க கூடாது எனத் தெரிவித்துள்ளார். மேலும், சம்பவத்தின் போது இர்ஃபான் முழுக்கை சட்டை அணியவில்லை எனவும், குழந்தைக்கு நோய்த்தொற்று பரவும் அபாயம் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் இதற்கு எப்படி அனுமதி வழங்கினார்கள் எனக் கேள்வி எழுப்பிய அவர், இது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படுமெனக் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் தரப்பில் இருந்து விளக்கம் பெறப்பட்டதும் தங்கள் துறை சார்ந்த நடவடிக்கை தொடரும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேபோல், கருவில் இருந்த குழந்தையின் பாலினத்தை வெளியிட்டதற்கு மன்னிப்பு கோரி வீடியோ பதிவிடாததையும் சுட்டிக் காட்டிய மருத்துவர் ராஜமூர்த்தி, அதற்கான சம்மனையும் வழங்க முடிவு செய்திருப்பதாக தெரிவித்தார். இர்ஃபான் தொடர்ச்சியாக இது போன்ற செயல்களில் ஈடுபடுவது தங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் நோக்கில் இருப்பதாக அவர் குற்றஞ்சாட்டினார். எனவே, பாலினம் வெளியிட்ட விவகாரம் தொடர்பான நடவடிக்கையும் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விவகாரத்தில் ஈடுபட்ட மருத்துவர் மீது புகார் அளிக்க வேண்டுமானால் தமிழ்நாடு மருத்துவர் கவுன்சிலுக்கு தான் தெரியப்படுத்த வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். மருத்துவ கவுன்சில் தான் இதனை விசாரித்து முடிவு செய்ய வேண்டுமென அவர் கூறியுள்ளார். மேலும், மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட சான்றிதழை தற்காலிகமாக ரத்து செய்ய தங்களுக்கு அதிகாரம் இருப்பதாக ராஜமூர்த்தி தெரிவித்துள்ளார். மேலும், இர்ஃபான் மீது காவல்துறையில் புகாரளிப்பதற்கு முன்பாக அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் எனக் கூறிய அவர், குறைந்தபட்சம் அந்த வீடியோவை இர்ஃபான் நீக்காவிட்டால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நன்றி: நியூஸ்18 தமிழ்நாடு
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“