தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 22ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுச்சேரிக்கு கிழக்கே நிலை கொண்டியிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வடமேற்கு திசையில் வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியை நோக்கி நகர்ந்தது. இது இன்று (டிச.20) வடக்கு திசையில், ஆந்திர கடலோரப் பகுதிகளையொட்டி நகரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுநாள் (டிச.22) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இன்று (டிச.20) முதல் டிச.25-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதிகாலை நேரங்களில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். சென்னை மற்றும் புகர் பகுதிகளில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வங்கக் கடலில் நிலவும் புயல் சின்னம் நாளை (டிச.21ம் தேதி) நெல்லூருக்கு கிழக்கே நிலைக்கொண்டிருக்கும். அதே நேரத்தில், ஆந்திர கடல் பகுதிக்கு மேல் உயர் அழுத்தம் இருப்பதால், புயல் சின்னம் மேலும் வடக்கு நோக்கி நகர வாய்ப்பில்லை. எனவே, இது மீண்டும் தமிழக கடற்கரையை நோக்கி திரும்பி நாளை மறுநாள் (டிச.22) சென்னைக்கு அருகே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது”.
இன்று காலை 10 மணி வரை, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசான இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும். நாகப்பட்டினம், திருவாரூர், காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“