மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் இன்று (திங்கட்கிழமை) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (செவ்வாய்க்கிழமை) தாழ்வு மண்டலமாகவும், நாளை மறுதினம் (புதன்கிழமை) புயலாகவும் கிழக்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் வலுவடைய உள்ளது எனவும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயலுக்கு 'டானா' என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. வங்கக்கடலில் உருவாகும் இந்த புயல், தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, ஒடிசா-வங்காள தேசம் இடையே மேற்கு வங்காளத்தில் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் ஒடிசா, மேற்கு வங்காளம் மாநிலங்களில் மழைக்கான வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை இந்த புயலினால் பெருமழைக்கு வாய்ப்பு இல்லை எனக் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும் அரபிக்கடலில் ஒரு காற்று சுழற்சி நிலவுவதால், மேற்கு காற்று தமிழ்நாட்டு பக்கம் வீசுவதற்கான வாய்ப்பு இருப்பதால் தமிழகத்தில் சில இடங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் மழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.
இது வடகிழக்கு பருவமழை காலத்தில் அரிதாக நிகழக்கூடிய நிகழ்வாக பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
வடதமிழக கடலோரப் பகுதிகளையொட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும், நாளையும் மிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இன்று (அக்.21) ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும்.
நாளை கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்கள், காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“