திமுக பவள விழா மற்றும் முப்பெரும் விழா, சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவில், மு.க.ஸ்டாலின் விருது பெற்ற பழனிமாணிக்கம் தனது ஏற்புரையில், ’திமுகவின் வெள்ளி விழா, பொன்விழா ஆண்டுகளை தலைவர் கலைஞர் கொண்டாடினார். பவளவிழா ஆண்டை மு.க.ஸ்டாலின் கொண்டாடியுள்ளார். வைர விழா ஆண்டை கொண்டாடுவதற்கு, எதிர்கால கட்சியை வழிநடத்துவதற்கு நீங்கள் ஒருவரை அடையாளம் காட்ட வேண்டும்.
கலைஞர் மறைவுக்குப் பின், இந்த கட்சி மீண்டும் அரியணை ஏறுமா? இவர் முதல்வர் ஆவாரா என்றெல்லாம் யூகம் சொல்லினர். கடின உழைப்பால் அனைத்து தேர்தல்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளீர்கள். தமிழகத்தை, சட்டப்பேரவைத் தேர்தல் எனும் போர்மேகம் சூழ்ந்துவிட்டது. ஒவ்வொரு நாளும் இனி கணிக்கப்பட வேண்டிய காலம். எனக்கு 9 தேர்தலில் தலைவரும் நீங்களும் வாய்ப்பு கொடுத்தீர்கள். எனக்காக, தேர்தல் பிரச்சாரத்தில் தலைவரோடும், உங்களோடும், உதயநிதியோடும் சென்றுள்ளேன்.
உங்களிடத்தில் பொதுமக்கள் காட்டுகிற அன்பு, கட்சித் தோழர்கள் காட்டுகிற விசுவாசம், வேறு எந்த தலைவர்களுக்கும் காட்டுவதில்லை என்பதுதான் உண்மை.
யாரை முன்னிலைப் படுத்தினால் பொதுமக்களை கவர முடியுமோ, கழகத் தோழர்களை வெறியோடு கட்சி வேலைகளை செய்யச் சொல்லமுடியுமோ? அவர்களைத்தான் நாம் முன்னிலைப்படுத்த வேண்டும்.
உங்களுக்கும், மேடையில் இருக்கும் தலைவர்களுக்கும் ஏன் இன்னும் தயக்கம். உதயநிதியை துணை முதலமைச்சராக்க வேண்டாமா? பேராசிரியரை விட பெரிய மனிதர்கள் யாரும் இங்கில்லை. பேராசிரியர் உங்களை எவ்வளவு பெரிய மனதோடு துணை முதலமைச்சராக ஏற்றுக் கொண்டார். நாங்களும் ஏற்றுக்கொள்வோம், காலம் தாழ்த்தாதீர்கள்’, என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“