ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் தமிழ்நாடு சட்டமன்ற அவை முன்னவர் பதவியை பிடித்தார். தொடர்ந்து அதிமுக.வில் ஓபிஎஸ் கை ஓங்குவதாக தெரிய வருகிறது.
ஓ.பன்னீர்செல்வம், தனி அணி கண்டபோது அதிமுக நிர்வாகிகளில் சொற்பமானவர்களே அவருடன் சென்றனர். ஆனால் தொண்டர்கள் பெருமளவில் அவருடன் திரண்டதாக பேசப்பட்டது. இபிஎஸ்-ஓபிஎஸ் அணிகள் இணைப்புக்கு பிறகு, ஓபிஎஸ்.ஸுக்கு உரிய முக்கியத்துவம் கிடைக்குமா? என்கிற கேள்வி எழுந்தது.
ஓபிஎஸ்.ஸுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டாலும்கூட, அந்தப் பதவிக்கென சிறப்பான அதிகாரம் எதுவும் கிடையாது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வரை முக்கியப் பிரச்னைகள் தொடர்பாக தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி உள்ளிட்டோரை அவர் மட்டுமே சந்தித்து பேசுகிறார். சசிகலா அணியில் இருந்து வருகிறவர்களும்கூட எடப்பாடி பழனிசாமியையே சந்தித்து வருகிறார்கள்.
ஓ.பன்னீர்செல்வம், அதிமுக.வின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டாலும்கூட அந்தப் பதவிக்கும் சிறப்பான அதிகாரங்கள் இல்லை. இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி கையெழுத்து போடாமல், ஒரு கிளைச் செயலாளரைக்கூட ஓபிஎஸ் மாற்ற முடியாது. எனவே ஆட்சியும் கட்சியுமே இபிஎஸ் கட்டுப்பாட்டில் சுழல்வதாக பேச்சு இருந்தது.
இந்தச் சூழலில் ஆர்.கே.நகரில் வேட்பாளராக கடந்த முறை ஓபிஎஸ் அணி சார்பில் நின்ற மதுசூதனனை மீண்டும் நிறுத்தியது ஓபிஎஸ் அணியின் முதல் வெற்றியாக பார்க்கப்பட்டது. அதைத் தொடர்ந்து டிசம்பர் 3-ம் தேதி வெளியான அதிமுக செய்தி தொடர்பாளர்கள் பட்டியலில் மொத்தமுள்ள 12 இடங்களில் 5 இடங்களை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பிடித்தனர். சொற்ப நிர்வாகிகளுடன் வந்து இணைந்த ஓபிஎஸ் தரப்புக்கு நாற்பது சதவிகிதத்திற்கும் அதிகமான இடங்களை ஒதுக்கியது அந்த அணியினரின் மற்றொரு வெற்றியாக பார்க்கப்பட்டது.
தற்போது தமிழ்நாடு சட்டமன்ற அவை முன்னவராக ஓ.பன்னீர்செல்வத்தை நியமனம் செய்து அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. தமிழ்நாடு சட்டமன்ற செயலாளர் பூபதி தனது செய்தி குறிப்பில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். ஏற்கனவே ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவை முன்னவராக ஓபிஎஸ் இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஓபிஎஸ் தனி அணி கண்டதும், மூத்த அமைச்சரான செங்கோட்டையன் அந்தப் பொறுப்பை ஏற்றார். தற்போது அதே பொறுப்பு மீண்டும் ஓபிஎஸ் வசம் வந்திருக்கிறது. இதேபோல ஏற்கனவே அணிகள் பிரிந்தபோது சசிகலா அணியின் அவைத்தலைவர் பொறுப்பை ஏற்ற செங்கோட்டையன், அணிகள் இணைப்புக்கு பிறகு அந்தப் பதவியை மதுசூதனனிடம் ஒப்படைத்தார். இப்போது அவை முன்னவர் பதவியையும் தாரை வார்க்க வேண்டியதாகிவிட்டது.
ஜனவரி 8-ம் தேதி தமிழ்நாடு சட்டமன்றம் கூடவிருக்கும் நிலையில் அவை முன்னவர் பதவி முக்கியத்துவம் வாய்ந்தது. எதிர்க்கட்சியினர் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் சொல்வது, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் தீர்மானத்தை முன்மொழிவது உள்ளிட்டவை அவை முன்னவரின் முக்கிய பணிகள் என்பது குறிப்பிடத்தக்கது.