/indian-express-tamil/media/media_files/2025/09/26/udhaii-2025-09-26-15-37-11.jpg)
'நான் வெறும் சனிக்கிழமை மட்டும் வெளியே வருபவன் அல்ல': விஜயை மறைமுகமாக சாடிய உதயநிதி ஸ்டாலின்
வரும் 2026-ஆம் ஆண்டு தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான களப் பணிகளில் தி.மு.க., அ.தி.மு.க, த.வெ.க உட்பட பல கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். த.வெ.க., அ.தி.மு.க போன்ற கட்சிகள் அரசியல் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
சமீபத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட த.வெ.க. தலைவர் விஜய், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக தான் தேர்தல் பரப்புரையை சனிக்கிழமைகளில் வைக்கிறோம் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நான் வெறும் சனிக்கிழமைகளில் மட்டும் வருபவன் அல்ல என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், த.வெ.க. தலைவர் விஜயை மறைமுகமாக சாடியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "நான் வெறும் சனிக்கிழமைகளில் மட்டும் வெளியே வரமாட்டேன். எல்லா நாட்களிலும் வெளியில் சுற்றுகிறேன்.
மக்களை சந்திக்கிறேன். பல மாவட்டங்களில் மக்கள் மனுக்களோடு நிற்பார்கள். அப்போது வண்டியை நிறுத்த சொல்லி மனுக்களை பெறுவேன். அந்தநேரத்தில் மக்கள் பாராட்டுவார்கள், வாழ்த்துவார்கள். தம்பி, அப்பாவிடம் ஆயிரம் ரூபாய் வந்துவிட்டது என்று சொல் என்பார்கள்.
மக்களிடம் ஆயிரம் ரூபாய் எப்படி பயன்படுகிறது என்று கேட்பேன். 90 சதவிகிதம் பேர் மருத்துவ செலவிற்கு பயன்படுவதாக கூறினார்கள். சிலர் குழந்தைகளோட கல்வி செலவிற்கு பயன்படுவதாக கூறினார்கள். மத்திய பாஜக அரசு, தமிழ்நாட்டிற்கு எப்படியெல்லாம் தொல்லை கொடுக்க வேண்டுமோ அப்படி எல்லாம் தொல்லை கொடுக்கிறார்கள்.
நமக்கு வரவேண்டிய நிதி உதவியை தடுத்து நிறுத்திகிறார்கள். ஜி.எஸ்.டியை குறைத்ததாக மத்திய அரசு நாடகமாடுகிறது. இதற்கு அ.தி.மு.க-வும் ஆதரவு கொடுக்கிறார்கள். ஜி.எஸ்.டி-யால் தமிழ்நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எட்டு வருடத்தில் சுமார் 55 லட்சம் கோடி ரூபாயை தமிழ்நாட்டு மக்கள் ஜி.எஸ்.டி வரியாக கட்டியுள்ளோம். புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் தமிழ்நாட்டிற்கு கல்வி நிதியை தருவோம் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.
சமஸ்கிருதத்தை தமிழ்நாட்டில் கொண்டு வருவதற்கானது தான் புதிய கல்விக் கொள்கை. எப்படியாவது மூன்றாவது மொழியாக இந்தியை தமிழ்நாட்டில் திணிக்க வேண்டும் என்று கொண்டுவரப்பட்டது தான் புதிய கல்விக் கொள்கை” என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.