/indian-express-tamil/media/media_files/lHWkt97kZUIFUbCYlTgR.jpg)
இ.டி அல்ல, மோடிக்கும் நாங்கள் பயப்பட மாட்டோம் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டு மைதானத்தில், 2017-18 ஆம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சி காலத்தில் 4.62 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு, தற்போது பாதியில் நிறுத்தப்பட்டுள்ள பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கத்தை, தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இன்று (மே 24) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டம் குறித்துப் பேசிய உதயநிதி ஸ்டாலின், "இக்கூட்டத்தில், சுணக்கமாக நடைபெறும் பணிகள் கண்டறியப்பட்டு, அதனை விரைவுபடுத்த அறிவுறுத்தப்பட்டது. புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கடந்த 2017-18 ஆம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சி காலத்தில் 4.62 கோடி மதிப்பில் பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. அதன்பிறகு நிதி நெருக்கடியால் அப்பணி கிடப்பில் உள்ள நிலையில், தற்போது அந்த பணியை முழுமை செய்ய நான்கரை கோடி ரூபாய் தேவை என்று அதிகாரிகள் ஆய்வு செய்து தெரிவித்துள்ளனர். அதற்குரிய நிதியில் 3.50 கோடியை தமிழ்நாடு முதலமைச்சர் ஒதுக்கீடு செய்துள்ளார். மீதமுள்ள ஒரு கோடி சட்டமன்ற உறுப்பினர்களின் நிதியிலிருந்து வழங்கப்படும். வருகின்ற டிசம்பர் மாதத்திற்குள் பல்நோக்கு விளையாட்டு அரங்கம் கட்டும் பணி முழுமையாக நிறைவடைந்து விளையாட்டு வீரர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.
இ.டி (அமலாக்கத்துறை) அல்ல, மோடிக்கும் நாங்கள் பயப்பட மாட்டோம். தொடர்ந்து நாங்கள் குரல் கொடுத்துக் கொண்டே இருப்போம். எங்களை மிரட்ட பார்த்தார்கள். மிரட்டி பயப்பட வைப்பதற்கு தி.மு.க அடிமைக் கட்சி கிடையாது. கலைஞர் உருவாக்கிய தி.மு.க இது; பெரியாரின் கொள்கை உடைய கட்சி இது. தவறு செய்தவர்கள் தான் பயப்பட வேண்டும்; நாங்கள் யாருக்கும் அடிபணிய தேவையில்லை, பயப்பட வேண்டிய அவசியமும் கிடையாது. எதையும் சட்டபூர்வமாக சந்திப்போம்" என்று பதிலளித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.