/indian-express-tamil/media/media_files/2025/02/19/rUya8w1GvXpEY9LuWRR6.jpg)
திருச்சியில், ரூ. 3 கோடி மதிப்பிலான ஜல்லிக்கட்டு அரங்கத்திற்கு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
தமிழகத்தில் மதுரை மாவட்டத்தின், அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதேபோல், திருச்சி மாவட்டத்தின் சூரியூர் ஜல்லிக்கட்டும் புகழ்பெற்றதாகும். இங்கு ஆண்டு தோறும் தை மாதத்தின் இரண்டாம் நாளான மாட்டுப் பொங்கலின் போது ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும்.
இப்பகுதியில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைத்து தர வேண்டும் என திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான அன்பில் மகேஷிடம் சூரியுர் மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனடிப்படையில், ரூ. 3 கோடி மதிப்பீட்டில் புதிய ஜல்லிக்கட்டு மைதானம் அமைப்பதற்கான ஆணையை தமிழக அரசு வெளியிட்டிருந்தது.
இதன் தொடர்ச்சியாக, ஜல்லிக்கட்டு மைதானம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (பிப் 19) நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நேற்று இரவு திருச்சிக்கு வருகை தந்திருந்தார். அவருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று கட்சி தொண்டர்களின் வீட்டு திருமண நிகழ்வுகளிலும் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அதன்பின்னர், ஜல்லிக்கட்டு மைதானத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் அவர் பங்கேற்றார். இதில் அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ், மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள், திருவெறும்பூர் தாசில்தார் ஜெயபிரகாசம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் பேசிய அவர், "மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்க வேண்டும் என்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடமிருந்து நிதி பெறுவது தொடர்பான ஆலோசனைகள் நடத்தப்படவுள்ளன. தமிழ்நாட்டிற்கான நிதியை மத்திய அரசு ஒதுக்குவதில்லை" எனக் கூறினார்.
செய்தி - க. சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.