/indian-express-tamil/media/media_files/2025/02/18/AyIDTS0XfaJBtvh0Ul02.jpg)
"தமிழ்நாட்டு மாணவர்களின் பெற்றோர் கட்டிய வரிப்பணத்தை தான் கல்வி நிதியாக கேட்கிறோமே தவிர, பிச்சை கேட்கவில்லை" என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மும்மொழிக் கொள்கை, தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி ஒதுக்காதது உள்ளிட்டவற்றை கண்டித்து சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ம.தி.மு.க பொதுச்செயலாளர் கைகோ, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "இந்தக் கூட்டத்தில் சாதாரண தி.மு.க தொண்டனாக தான் நான் கலந்து கொள்கிறேன். தமிழர்கள் அனைவரும் அன்புக்கு கட்டுப்பட்டுவர்கள். எந்தக் காலத்திலும் தமிழர்கள் அடக்குமுறைக்கு பயப்பட மாட்டார்கள். இதனை பாசிச பா.ஜ.க அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்று தான் இக்கூட்டம் நடத்தப்படுகிறது.
சமீபத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு என எந்த திட்டமும் இடம்பெறவில்லை. ஃபீஞ்சல் புயலின் போது மத்திய அரசு சார்பில் ரூ. 950 கோடி மட்டும் தான் நிதி ஒதுக்கப்பட்டது. இப்போது இந்தியை ஏற்காத காரணத்தினால் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறைக்கு வர வேண்டிய ரூ. 2190 கோடியை, மற்ற மாநிலங்களுக்கு வழங்கியுள்ளனர்.
மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே தமிழ்நாட்டுக்கு நிதி வழங்கப்படும் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் ஒன்னும் உங்களது அப்பன் வீட்டுக் காசை கேட்கவில்லை. பிச்சையோ, கடனோ நாங்கள் கேட்கவில்லை. தமிழ்நாட்டு மாணவர்களின் பெற்றோர்கள் அளித்த வரிப்பணத்தை தான் நிதியாக திருப்பி கேட்கிறோம். எங்களுக்கு சேர வேண்டிய நிதி உரிமையை தான் நாங்கள் கேட்கிறோம்.
இந்த ஆர்ப்பாட்டம் வெறும் தொடக்கம் தான். விரைவில் தமிழ்நாடு முழுக்க போராட்டமாக மாறும். இன்னொரு மொழிப்போரை சந்திக்கவும் தமிழ்நாடு தயங்காது. 100 பேர் அல்ல, ஆயிரக்கணக்கானோர் உயிரையும் கொடுத்து தமிழைக் காக்க தயாராக இருக்கிறோம். உரிமைகளைக் காக்க உயிரையும் விட தயாராகவே உள்ளோம்.
இந்த சூழலில் அ.தி.மு.க-விற்கும் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். இந்த பிரச்சனையை கொண்டு அரசியல் செய்வதையும், அவதூறு பேசுவதையும் கைவிடுங்கள். கட்சி பெயரில் திராவிடத்தையும், அண்ணாவையும் வைத்துக் கொண்டு ஒதுங்கி நிற்காதீர்கள்; எங்களுடன் இணைந்து குரல் கொடுங்கள்" எனத் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.