ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம் முன்பு அதிமுக எம்.பி.யும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை இன்று ஆஜரானார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக எழுந்த தொடர் சந்தேகங்களுக்கு பிறகு, இது குறித்து விசாரணை நடத்த நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் நியமிக்கப்பட்டது. இந்த ஆணையம் ஜெயலலிதா சிகிச்சைப் பெற்ற அப்போலோ மருத்துவமனை, அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் என அனைவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.
கடந்த மாதம் விசாரணை ஆணையம் முன்பு ஆஜரான தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் இரண்டரை மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அதன்பிறகு, ‘ஜெயலலிதாவை வெளிநாட்டில் சிகிச்சை அளிக்க அழைத்துச் செல்ல ராதாகிருஷ்ணன் தான் மறுத்தார். அவர் மீது விசாரணை நடத்த வேண்டும்’ என தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம் சாட்டியது பெரும் பரபரப்புக்கு உள்ளானது.
அதைத் தொடர்ந்து, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று முதன் முதலாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன்பு ஆஜரானார்.
6 மணி நேரத்துக்கும் மேல் நடைபெற்ற விசாரணையில், சசிகலா தரப்பு வழக்கறிஞரின் குறுக்கு விசாரணை ஆகியவற்றிற்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலளித்தார்.
பிறகு செய்தியாளர்களுடன் பேசிய சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன், 2 மணி நேரம் நடைபெற்ற குறுக்கு விசாரணையில், ஜெயலலிதாவை சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்வது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கவில்லை என்று விஜயபாஸ்கர் கூறியதாக குறிப்பிட்டார். வெளிநாட்டு சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களும் பரிந்துரைக்கவில்லை என விஜயபாஸ்கர் கூறியதாக ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்தார்.
இந்த நிலையில், அதிமுக எம்.பி.யும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை இன்று விசாரணை ஆணையம் முன்பு ஆஜரானார். ஜெயலலிதா மரணம் குறித்து ஆணையத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு அவர் பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.