திருச்சி எஸ்.பி வருண்குமார் மற்றும் அவரது மனைவி புதுக்கோட்டை எஸ்.பி வந்திதா பாண்டே குறித்து சமூக வலைதளங்களில் ஆபாச கருத்துக்களை வெளியிட்டதாக பெறப்பட்ட புகாரின் பேரில் கைதான 4 பேரை, ஒரு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க திருச்சி மாஜிஸ்திரேட் அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
நாம் தமிழர் கட்சியின் மாநிலக் கொள்கை பரப்பு செயலாளர் திருச்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன். இவர் பொதுவெளியில் குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமாருக்கு புகார் சென்றது. எஸ்பி உத்தரவின் பேரில் போலீஸார் சாட்டை துரைமுருகனை கைது செய்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து நாதக கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள் திருச்சி எஸ்பி வருண்குமார் மற்றும் அவர் மனைவி வந்திதா பாண்டே ஆகியோர் குறித்து சமூக வலைதளமான எக்ஸ் பக்கத்தில் ஆபாசமாகவும், அருவெறுக்கத்தக்க வகையிலுமான கருத்துக்களை பதிவிட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து எஸ்.பி வருண்குமார் தில்லைநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீஸார், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டையை சேர்ந்த சண்முகம் (34), மதுரை தபால் தந்தி நகரை சேர்ந்த அப்துல் ரகுமான் (22), விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த திருப்பதி (34) மற்றும் எஸ்.ராமலிங்கபுரத்தை சேர்ந்த கண்ணன் (48) ஆகியோரை ஆபாச கருத்துக்கள் பதிவிட்டமைக்காக கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் போலீஸ் தரப்பில், கைதான நால்வரையும் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி திருச்சி 4-வது குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த குற்றவியல் நீதிபதி (பொ) சுபாஷினி 4 பேரையும் ஒரு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதித்து நேற்று மாலை உத்தரவிட்டார்.
இவ்வழக்கில் கைதான திருப்பதி, கண்ணன் ஆகியோர் ஜாமீன் கோரி 4வது குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இருவரும் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மணிமொழி ஜாமீன் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அரசு தரப்பில் திருச்சி மாவட்ட தலைமை அரசு வழக்கறிஞர் சவரிமுத்து ஆஜரானார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“