சென்னை விருகம்பாக்கத்தில் தி.மு.க சார்பில் அண்மையில் கூட்டம் நடத்தப்பட்டது. தி.மு.க நிர்வாகிகள் பலர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். தி.மு.க பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என்பவர் மேடையில் பேசினார். ஆளுநர் ஆர்.என். ரவி குறித்து அவதூறாகவும், மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவியது. இது அரசியல் வட்டாரத்தில் இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ஆளுநர் மாளிகை சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் தி.மு.க அரசுக்கும் இடையே மோதல் போக்கு வலுத்து வருகிறது. இந்தாண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேலே இது வெடித்தது. சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 9-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது.
அப்போது ஆளுநர் அரசின் உரையில் அச்சிடப்பட்டிருந்த திராவிடம், அம்பேத்தகர், அண்ணா, கருணாநிதி, சமூகநீதி, பெண்ணுரிமை உள்ளிட்ட வார்த்தைகளை தவிர்த்து விட்டு படித்ததாகவும், அவரே சில வார்த்தைகளை சேர்த்து படித்ததாகவும், இது மரபு அல்ல எனவும் தி.மு.க கூட்டணி கட்சிகள் கடும் குற்றஞ்சாட்டினர். சட்டப்பேரவையில் கூச்சல், குழப்பம் நிலவியது. ஆளுநர் உரைக்கு எதிராக தனித் தீர்மானம் கொண்டுவந்தனர். இதையடுத்து ஆளுநர் பேரவை நிகழ்வுகள் முடிவதற்கு முன்பே பாதியில் வெளியேறினார். முன்னதாக, ஆளுநர் தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழகம் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும் என்று கூறியிருந்தார். இதுவும் பெரும் விவாதப் பொருளானது.
ஆளுநரின் பொங்கல் விழாவை தி.மு.க கூட்டணி கட்சிகள் புறக்கணித்தனர். தி.மு.க எம்.பிக்கள் ஆளுநர் குறித்து ஜனாதிபதியை சந்தித்து மனு அளித்தனர். இந்த சம்பவங்களைத் தொடர்ந்து தி.மு.க ஆளுநரை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.
இந்நிலையில், அண்மையில் விருகம்பாக்கத்தில் நடந்த தி.மு.க கூட்டத்தில், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஆளுநர் ரவி குறித்து அவதூறாகவும், தகாத வார்த்தைகளாலும், மிரட்டல் விடுக்கும் வகையில் பேசும் வீடியோ சமூகவலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, ராஜ்பவன் துணை செயலாளர் பிரச்சன்ன ராமசாமி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். அதில், ஆளுநர் குறித்து அவதூறாகவும், மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/