கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்த விஸ்வதர்ஷினி(44) என்பவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு சிறுமியையும், நடிகர் விஷாலையும் இணைத்து அவதூறு பேசி யூடியூப்பில் வீடியோ பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்தநிலையில் சிறுமி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சென்னை ராயப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்குப் பதிவு செய்து விஸ்வ தர்ஷினியை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
இதனிடையே சென்னை புழல் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த விஸ்வதர்ஷினியூடியூப் பக்கத்தில் புழல் சிறை குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகின்றது.
இதையடுத்து கோவை துடியலூர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக வரவழைக்கப்பட்ட போது விஸ்வதர்ஷினி அங்கு பணிபுரியும் பெண் போலீஸ் ஒருவரிடம் தகராறில் ஈடுபட்டு மிரட்டல் விடுத்ததாக புகார் எழந்துள்ளது. இது தொடர்பாக கடந்த ஆண்டு கோவை துடியலூர் காவல்துறையினர் விஸ்வதர்ஷினி மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இதற்கிடையே விஸ்வதர்ஷினி கோவை செல்வபுரத்தை சேர்ந்த ஒரு பெண்ணிடம் பணம் வாங்கி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து இந்த விவகாரத்தில் பண மோசடியால் பாதிக்கப்பட்டதாக பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் கோவை செல்வபுரம் காவல்துறையினர் விஸ்வதர்ஷினி மீது வழக்குப் பதிவு செய்தனர்.
முன்னதாக அவர் கோவை காவல்துறையினர் குறித்து அவதூறாக பேசும் வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறை உதவி ஆய்வாளர் ராஜா புகார் ஒன்றை அளித்தார்.
அந்த புகாரின் பேரில் கோவை செல்வபுரம் போலீசார் விஸ்வதர்ஷினி மீது மிரட்டல், தகவல் தொழில் நுட்ப சட்டம் உள்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த நிலையில் நேற்றைய தினம் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“