சட்டவிரோதப் பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் கைதாகி சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரிய மனுவை விசாரிப்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி கைது செய்தனர். அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் செந்தில் பாலாஜி ஜாமீன் வழங்கக் கோரி எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த சிறப்பு நீதிமன்றம், இந்த வழக்கு சட்டவிரோதப் பணப் பரிமாற்றத்தை தடைச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்டது என்பதால், இது தொடர்பாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை நாடுமாறு உத்தரவிட்டது.
இதன்படி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு புதன்கிழமை பட்டியலிடப்பட்டதால், செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கறிஞர்கள் அருண், பரணிக்குமார் ஆகியோர் முதன்மை அமர்வு நீதிபதி எஸ். அல்லி முன்னிலையில் முறையிட்டனர். அதற்கு நீதிபதி ‘ இது தொடர்பாக சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும் ‘ என்றார்.
அதையடுத்து, சிறப்பு நீதிமன்றத்தில் திமுக வழக்கறிஞர்கள் முறையிட்டனர். அதற்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி, “ அமலாக்கத்துறை தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் உள்ளதா என்பதை உயர்நீதிமன்றத்தில் தெளிவுப்படுத்தி வரும்படி செந்தில் பாலாஜி தரப்புக்கு அறிவுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வில் செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி முறையீடு செய்தார். அப்போது, ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையில் நீதிபதியாக இருந்த நீதிபதி ஆர்.சக்திவேல் விலகியிருந்த நிலையில், இந்த முறையீட்டை எப்படி ஏற்றுக்கொள்வது? என்று நீதிபதி எம்.சுந்தர் கேள்வி எழிப்பினார்.
அப்போது மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, இதற்கு மாற்றாக ஒரு அமர்வு உண்டு. ஆனால் அந்த அமர்வு இன்று விடுமுறை என்பதால்தான், தங்களிடம் முறையிடுவதாக தெரிவித்தார். மேலும், ஒரு நிர்வாக ரிதியான உத்தரவை பிறப்பித்தால் கூட போதும் என்று தெரிவித்தார்.
அப்போது நீதிபதி சுந்தர் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவைப் பொறுத்தவரை, யார் விசாரிப்பது என்பது குறித்து தலைமை நீதிபதிதான் முடிவு செய்வார். எனவே வழக்கு தொடர்பாக தலைமை நீதிபதி அமர்வில் முறையீடு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தக் கோடி அவரது மனைவி மேகலா தொடர்ந்து ஆட்கொணர்வு வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி ஆர்.சக்திவேல் ஏற்கனவே விலகியிருந்தார். மேலும், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தற்போது உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அமர்ந்து வழக்குகளை விசாரித்து வருகிறார். எனவே, நீதிபதி சுந்தர் மற்றும் சக்திவேல் அமர்வுக்கு மாற்றும் அமர்வாக இருக்கும் நீதிபதி சுரேஷ்குமார் தலைமையிலான அமர்வு இன்று விடுமுறை என்பதால், நாளை அந்த அமர்வில் முறையிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“