/indian-express-tamil/media/media_files/2025/04/12/soTS4mcRTzyjuYm9emfF.jpg)
கோவையில், வெள்ளியங்கிரி மலையில், பக்தர் ஒருவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதில் அவர் உயிரிழந்தார்.
கோவை, வெள்ளியங்கிரி மலையில் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் மே மாதம் வரை மலையேறி சாமி தரிசனம் செய்யலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஏராளமான பக்தர்கள் இப்பகுதிக்கு சாமி தரிசனத்திற்காக வருகை தருகின்றனர்.
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் கடந்த 9-ஆம் தேதி தனது நண்பர்களுடன் வெள்ளியங்கிரி மலை சுயம்பு லிங்கத்தை தரிசனம் செய்வதற்காக சென்றிருந்தார்.
தரிசனம் செய்த பின்னர் இன்று (ஏப்ரல் 12) அதிகாலை ஐந்தாவது மலை அருகே வரும்போது அப்பகுதியில் கடுமையான குளிர் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்ட ரமேஷ் மயங்கி விழுந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, ஆலந்துறை காவல்துறை மற்றும் கோயில் நிர்வாகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. வனத்துறையினர் உதவியுடன் மயங்கி விழுந்த ரமேஷை, கீழே இறக்கி கொண்டு வந்தனர்.
எனினும், மலை அடிவாரத்தில் ரமேஷை பரிசோதனை செய்த மருத்துவக் குழுவினர், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர். இச்சம்பவம் குறித்து ஆலந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த ரமேஷ், காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்தார் என தெரிய வருகிறது. அவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இதேபோல், கடந்த மார்ச் மாதம் 25-ஆம் தேதி ஒரு பக்தர் உயிரிழந்தார். இருதய கோளாறு, சுவாச பிரச்சனை இருப்பவர்கள் மலை ஏறக் கூடாது என்று வனத்துறையினர் வலியுறுத்தியுள்ளனர். மலை ஏறுவதற்கு முன்பாக, அடிவாரத்தில் மருத்துவ சோதனைகளும் மேற்கொள்ளப்படுகிறது. இருந்த போதிலும், இத்தகைய சம்பவங்கள் நடக்கின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.