கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் 'தென்கைலாயம்' என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி கோவில் அமைந்து உள்ளது. 7 மலைகளை தாண்டி சுயம்பு வடிவில் இருக்க கூடிய சிவலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவர். இந்தாண்டு பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் கிராமத்தை சேர்ந்த புண்ணியகோடி (46) என்பவர் அவர்களது நண்பர்கள் 10 பேர் அடிவாரத்தில் தரிசனம் முடித்து பூண்டி மலை ஏற தொடங்கினார். ஒன்றாவது மழை ஏறும் போது திடீரென புண்ணியகோடிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்துள்ளார்.
அவர் உடன் இருந்தவர்கள் உடனடியாக அவரை கீழே அழைத்து வந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆலந்துறை பகுதியில் உள்ள பூலுவபட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார்.
இது குறித்து ஆலந்துறை காவல்துறைக்கு தகவல் தெரிவித்து உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தாண்டில் மட்டும் வெள்ளிங்கிரி மலை ஏறியவர்களில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“