உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயில் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயில் வளாகங்களில் மாமன்னர்களான ராஜராஜ சோழன், முதலாம் ராஜேந்திர சோழனுக்கு முழு உருவ வெண்கல சிலைகள் அமைக்க வேண்டும் என தெய்வீக பக்தர்கள் பேரவையின் நிறுவனத் தலைவர் ஜெமினி எம்.என். ராதா, பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோருக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த மனுவில், அண்மையில் நடந்த முதலாம் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழா, கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயில் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா, மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்துச் சென்ற ஆயிரமாவது ஆண்டு நிறைவு முப்பெரும் விழாவைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விழாவில் பிரதமர் மோடி, மாமன்னர்கள் ராஜராஜ சோழன் மற்றும் முதலாம் ராஜேந்திர சோழனின் பிரமாண்டமான சிலைகள் தமிழ்நாட்டில் அமைக்கப்படும் என்று அறிவித்ததை அனைவரும் வரவேற்றதாகவும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த கால நிகழ்வை நினைவூட்டும் விதமாக, 1976 ஆம் ஆண்டு தஞ்சைப் பெரிய கோவிலில் ராஜராஜ சோழன் சிலை வைக்க அப்போதைய முதல்வர் கருணாநிதி மத்திய அரசை அணுகியபோது, கோயிலின் உள்ளே சிலைவைக்க மத்திய அரசு அனுமதி மறுத்தது. இதன் காரணமாக கோவிலின் வெளிப்புறத்தில் ராஜராஜ சோழன் சிலை வைக்கப்பட்டதால், தமிழர்கள் அனைவரும் வேதனை அடைந்தனர் என்பதையும் மனுவில் ஜெமினி எம்.என். ராதா குறிப்பிட்டுள்ளார்.
தற்போது, மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் இனி அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்ததையடுத்து, தமிழ்நாடு அரசு அதை சிறப்பாகக் கொண்டாடி வருகிறது என்பதையும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே தமிழகத்திற்கும் தமிழர்களின் கட்டடக்க கலைக்கும் பெருமை சேர்க்கும் வகையில், உலக பாரம்பரிய சின்னமாக விளங்கும் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில் வளாகத்தில் இக்கோயிலைக் கட்டிய ராஜராஜ சோழனுக்கு முழு உருவ வெண்கலச் சிலை அமைக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது. அதேபோல், கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயிலைக் கட்டிய முதலாம் ராஜேந்திர சோழனுக்கும் அக்கோவில் வளாகத்தில் முழு உருவ வெண்கலச் சிலை அமைக்க வேண்டும் என்று பக்தர்கள், சமூக ஆர்வலர்கள், ஆன்மீகத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் விரும்புவதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.