சென்னை மாநகர காவல் ஆணையர், ஐ.ஜி. ஏ.டி.ஜி.பி, டி.ஜி.பி என தமிழ்நாடு காவல்துறையில் பல்வேறு பதவிகளை வகித்து சிறப்பாக செயல்பட்ட ஏ.கே. விஸ்வநாதன், பணி நிறைவு நிகழ்ச்சியில் காக்கிச்சட்டை அணியும் கடைசி நாளில் கண்கலங்கியதாகவும் அடுத்த பிறவியிலும் தமிழ்நாடு காவல் துறையிலேயே பணிபுரிய விரும்புவதாகவும் உருக்கமாகப் பேசினார். மேலும், பணி நிறைவு நிகழ்ச்சியில் ஏ.கே. விஸ்வநாதனை அவருடைய மகன் கட்டிப்பிடித்து அழுத நிகழ்வு உணர்ச்சிகரமாக இருந்தது.
தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக இருந்த டி.ஜி.பி ஏ.கே.விஸ்வநாதன் புதன்கிழமை (ஜூலை 31) ஓய்வு பெற்றார்.
1990-ஆம் ஆண்டு யு.பி.எஸ்.சி. தோ்வில் தமிழ்நாடு மாநில ஐ.பி.எஸ். அதிகாரியாக தோ்வான ஏ.கே. விஸ்வநாதன், தா்மபுரி மாவட்ட ஏ.எஸ்.பி.யாக தனது பணியை தொடங்கினாா்.
சென்னை மாநகரக் காவல் ஆணையராக 2017 மே 15 முதல் 2020 ஜூலை 1 வரை பணியாற்றிய ஏ.கே.விஸ்வநாதன், சென்னை மாநகரின் மூன்றாம் கண் எனப்படும் கண்காணிப்பு கேமரா பொருத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்தினாா். சென்னையில் குற்றங்களைக் குறைத்ததிலும் குற்றவாளிகளை விரைவாகப் பிடிப்பதில் உதவியாக சி.சி.டி.வி கண்காணிப்பு கேமிரா சென்னை முழுவதும் பொருத்தி, சென்னையை முழுவதுமாக சி.சி.டி.வி கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவந்த பெருமை ஏ.கே. விஸ்வநாதனையே சேரும்.
தமிழ்நாடு காவல்துறையில், 34 ஆண்டுகள் பல்வேறு உயா் பொறுப்புகளில் பணியாற்றிய இவா், நிறைவாக தமிழ்நாடு காவலா் வீட்டு வசதி கழக தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநராக பதவியில் இருந்த நிலையில் புதன்கிழமை பணி ஓய்வு பெற்றாா்.
இவருக்கான பிரிவு உபசாரவிழா சென்னை எழும்பூா் ராஜரத்தினம் மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது, காவலா்களின் அணிவகுப்பு மரியாதையை வாகனத்தில் சென்றபடி பாா்வையிட்ட ஏ.கே. விஸ்வநாதனுக்கு டி.ஜி.பி சங்கா் ஜிவால் மற்றும் மாநகர காவல் ஆணையா் அருண் ஆகியோா் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனா்.
டி.ஜி.பி ஏ.கே. விஸ்வநாதன் பணி நிறைவு நிகழ்ச்சியில் பேசியதாவது: “நான், 1990-ல், இந்திய காவல் பணி அதிகாரியாக சேர்ந்து, 34 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெறுகிறேன். தமிழ்நாடு காவல் துறையில் பணிபுரிந்ததை பெருமையாக கருதுகிறேன். என் தாத்தா பெருமாள் தலைமை காவலராக பணிபுரிந்தார். என் தந்தை அய்யாசாமி, எஸ்.ஐ-யாக பணியில் சேர்ந்து டி.எஸ்.பி வரை பணிபுரிந்தார்.
எங்கள் வீட்டில் நான் மூன்றாம் தலைமுறை காவல் அதிகாரி. இதற்கு காரணமாக இருந்த என் தாத்தா, பாட்டிக்கு நன்றி. எனக்கு பக்கபலமாக இருந்த என் மனைவியும், சீருடை பணியாளர் தேர்வு குழும டி.ஜி.பி-யாக உள்ள சீமா அகர்வால் மற்றும் என் குடும்பத்தாருக்கும் நன்றி.
எனக்கு தரப்பட்ட எந்த பணியையும் சிறியதாக நினைத்தது இல்லை. அதில் என்ன மாற்றம் செய்யலாம், சிறந்த முறையில் பணிபுரியலாம் என்று சிந்தித்து செயல்பட்டுள்ளேன். நம் பணியின் மீது மற்றவர்களின் அளவீடுகளைவிட நமக்கு மன திருப்தி உள்ளதா என பார்க்க வேண்டும். அந்த வகையில் எனக்கு முழு மன திருப்தி உள்ளது.
வீரம், விவேகம், கம்பீரம், மக்கள் நலன் ஆகிய பண்புகளை தனக்குள்ளே கொண்டுள்ள இந்த தமிழ்நாடு காவல்துறையில் நான் பணி புரிந்ததை பெருமையாகக் கருதுகிறேன்.
ஒவ்வொரு காவல் நிலைய அளவில் காவலர்கள், அதிகாரிகள் செய்யும் சிறப்பான பணியே உயர் அதிகாரிகளுக்கும் அரசுக்கும் நல்ல பெயரைத் தேடித் தரும்.
இன்று தமிழ்நாடு காவல்துறை சட்டம் ஒழுங்கைக் காப்பதிலும், குற்றங்களைத் தடுப்பதிலும் நிகழ்ந்த குற்றங்களைக் கண்டுபிடிப்பதிலும் இந்தியாவிலேயே சிறந்து விளங்குவதற்கு அவர்களுடைய கடுமையான உழைப்பே காரணம். அதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதோடு இத்தகைய உழைப்பை அவர்கள் தொடர்ந்து அளித்திட வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
துன்பத்தோடு காவல் நிலையத்திற்கு வருகிற ஒவ்வொரு பிரச்னைகளும் அவர்களுக்கு மிகப்பெரியதாகவே இருக்கும். அந்த துன்பங்களைக் களைந்து நம் நியாயமான நடவடிக்கையின் காரணமாக அவர்களுக்கு நீதி கிடைக்க ஏதுவாக பணி செய்யும்போது, அவர்கள் முகத்தில் உருவாகின்ற மலர்ச்சியும் புன்னகையும் விலைமதிப்பற்றது.
இன்று கடைசியாக காக்கி சீருடை அணியும்போது, என் கண்கள் கலங்கின. அடுத்த பிறவி என்று உண்டு என்றால், அதிலும் நான் காவல்துறையிலேயெ பணிபுரியும் வாய்ப்பை இறைவன் எனக்கு கொடுக்க வேண்டும் என்ற வேண்டுதலே எனக்கு உண்டு என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று நன்றி தெரிவித்தார்.
ஏ.கே. விஸ்வநாதன் பணி நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவருடைய மகன், அவரைக் கட்டிப்பிடித்து கண்கலங்கிய நிகழ்வு அங்கே உணர்ச்சிகரமாகவும் உருக்கமாகவும் இருந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.